தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை விவகாரம்
தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை விவகாரம் - திமுக, அமைச்சர்கள் இடையே காரசார விவாதம்
சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் பேசும் போது ஆதாரத்துடன் தான் பேச வேண்டும் என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவுறுத்தியுள்ளார்.
Published : August 21, 2026 at 3:45 PM IST
சென்னை: சட்டப்பேரவை நீக்கப்பட்ட உரைகள் ரீல்ஸ் ஆக சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருவது குறித்து திமுக, அமைச்சர்கள் இடையே காரசார விவாதம் ஏற்பட்டது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் ஐந்தாவது நாளான இன்று (ஆக.21) நீதி, சிறை, சட்டம், எரிசக்தி, இந்து சமய அறநிலையத்துறை ஆகிய துறைகள் மீதான மானிய கோரிக்கைகள் விவாதம் நடைபெற்று வருகிறது.
சபாநாயகரை பாராட்டிய உதயநிதி ஸ்டாலின்
அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "இந்த அவையை முடிந்தவரை நீங்கள் சிறப்பாக வழிநடத்திகொண்டுப் போகிறீர்கள். எங்களுக்கும் கேள்வி கேட்பதற்கான வாய்ப்பைக் கொடுக்கிறீர்கள். எங்களைவிட அதிகமாக ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கும், அமைச்சர்களுக்கும் வாய்ப்புக் கொடுக்கிறீர்கள். நான் இங்கே குறிப்பிட விரும்புவது எல்லாம் ஆளுங்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள், அமைச்சர் பெருமக்கள், எங்களுக்கு பதில் சொல்லும்போது ஆதாரம் இல்லாமல் பல குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர். ஆனால், நீங்கள் அதை அவை குறிப்பில் இருந்து நீக்கி விடுகிறீர்கள்.
இன்னும் சொல்லப்போனால் சட்டமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதைவிட ஆளுங்கட்சி உறுப்பினர்கள், அமைச்சர் பெருமக்கள் பேசுவதையெல்லாம் நீங்கள் தான் முதன்முதலாக அவை குறிப்பில் இருந்து அதிகமாக நீக்கியுள்ளீர்கள். அந்த வரலாறை நீங்கள் படைத்திருக்கிறீர்கள். அதற்கு எங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அவை நிகழ்ச்சி அனைத்தும் நேரலையாக செய்து வருகிறீர்கள். கேள்விகளை நாங்கள் கேட்டால் நாங்களே ஆச்சரியம்படும் அளவிற்கும், அதிசயம்படும் அளவிற்கும் பதில்களை தருகிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ரீல்ஸ்
கேள்விகளைக் கேட்டால் பதில் சொல்லலாம்; இப்போது பாடல்களையெல்லாம் பாட ஆரம்பித்திருக்கிறீர்கள். எங்களுக்கே சில நேரம் சட்டமன்றத்திற்கு வந்திருக்கிறோமா? இல்லை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோமா? என சந்தேகப்படும் அளவிற்கு பாட்டு நிகழ்ச்சி நடந்துக் கொண்டிருக்கிறது. அதனை நீங்கள் அவை குறிப்பில் இருந்து நீக்கி விடுகிறீர்கள். ஆனால் நேரலையில் போகும்போது இவையெல்லாம் யூடியூப் சேனல்களிலும், சமூக வலைத்தளங்களிலும் ரீல்ஸ் ஆக கட் செய்யப்பட்டு அதிகமாக ஷேர் செய்யப்படுகிறது.
அதன்பிறகு நீங்கள் நீக்குவதில் அர்த்தமில்லாமல் போய்விடுகிறது. எனவே, இதனை மீண்டும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்பிகிறேன். அதே மாதிரி இன்னொரு விஷயம், நேற்று முன்தினம் பேரவையில் பேசிய நம்முடைய முதலமைச்சர் அவர்கள், தன்னுடைய டேபிளில் மூன்று கோப்புகள் இருப்பதாகவும் அந்த கோப்புகளை திறந்துப் பார்க்க வைத்து விடாதீர்கள் என எங்களுடைய அரசை குற்றஞ்சாட்டுகின்ற வகையில் குறிப்பிட்டு பேசியிருக்கிறார். நாங்கள் கேட்டுக் கொள்வது அந்த கோப்புகளைத் திறந்து பார்க்க வேண்டும். அதன் மீது அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். எதற்காக பயப்படுகிறீர்கள்? எதற்காக காலம் தாழ்த்துகிறீர்கள்? இதையே மூன்று மாதங்களாகக் கூறிக் கொண்டு இருக்கிறீர்கள். ஜோசியக்காரன் சொன்னால் தான் அந்த கோப்புகளைத் திறந்து பார்ப்பீர்களா? நல்ல நேரம் பார்த்துக் கொண்டு இருக்கிறீர்களா?" என்று கேள்வி எழுப்பினார்.
எங்களுக்கு எந்த பயமும் கிடையாது
வெளிப்படைத்தன்மையுடன் சட்டப்பேரவையை நடத்த திமுகவிற்கு தைரியம் இல்லை
திமுக கொறடா ஆதாரம் இருக்கா? ஆதாரம் இருக்கா? என்று கேட்டார். அதற்கு நிதியமைச்சர், எங்களிடம் ஆதாரம் உள்ளது; அதனை தகுந்த நேரத்தில் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார் என்பதை தற்போது பதிவுச் செய்ய விரும்புகிறேன். ஏனென்றால் எதிர்க்கட்சித் தலைவர் அன்றைக்கு வரவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக என்ன ரீல்ஸ் விட்டனர், என்ன பாட்டு பாடினார்கள், பாராளுமன்றத்திலேயே பதவியேற்கும் போது யாரை குறிப்பிட்டு பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார்கள் என்பது மக்களுக்கு தெரியும். நீங்கள் 25 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருந்தீர்கள்; சட்டப்பேரவை நிகழ்வுகளை ஏன் நேரலை செய்யவில்லை? உங்களிடம் இதுவரை நேர்மையான, வெளிப்படைத்தன்மையான சட்டமன்றத்தை நடத்தக் கூறி தைரியம் திமுகவிற்கு இருந்ததில்லை. உங்களுடைய 2021-ல் திமுக தேர்தல் அறிக்கையில் சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்கிறோம் என்று சொன்னீர்களே, ஏன் செய்யவில்லை?" என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
மார்க்கெட்டில் முதியவர் சொன்னதைப் பகிர்ந்து அமைச்சர் என்.ஆனந்த்
அதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் என்.ஆனந்த், "ஜோசியர் என்ற வார்த்தையை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நேற்று மார்க்கெட்டில் 70 வயது முதியவர் சொன்ன வார்த்தை, இப்போது நாங்கள் சீரியல் பார்ப்பதில்லை; சட்டப்பேரவை நேரலையை நானும், மனைவியும், பேத்தியும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பேத்தி கல்லூரி முடித்து கொண்டு வந்ததும் பார்ப்போம்; உண்மையாக மிகவும் சந்தோஷமாக இருக்கிறது; நிம்மதியாக இருக்கிறோம். எங்களிடம் இருந்த பயம் விலகி எங்களுக்கு என்று ஒரு பிள்ளை (முதலமைச்சர்) இருக்கிறார்" என்று முதியவர் கூறினார். இது உண்மை சம்பவம். தமிழ்நாட்டில் முதன்முறையாக சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலை செய்வதற்கு தைரியமாக முதலமைச்சர் அனுமதி அளித்துள்ளார்" என்றார்.
சட்டம் மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர் சி.டி.நிர்மல்குமார் கூறுகையில், "ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டதையெல்லாம் ஏற்கனவே தமிழ்நாடு பார்த்துவிட்டது. எதை செய்தாலும் வெளிப்படையாக எந்த ஒளிவும், மறைவும் இன்றி செய்வோம். எதை எப்போது எடுக்க வேண்டும் என்பதும் தெரியும்" என்றார்.
பேரவையில் பாட்டு பாடுவது புதுசு கிடையாது
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறுகையில், "நேரலை என்பது ஆளுங்கட்சிக்கு சாதகமாக இல்லாமல் முழுமையான நேரலையாக இருக்க வேண்டும். அதனை தமிழக வெற்றிக் கழகம் கொடுக்கிறது. ஏதோ ஆளுங்கட்சியினர் பேசுவதை மட்டும் சபாநாயகர் நீக்குவதுபோல ஒரு தோற்றத்தை எதிர்கட்சித்தலைவர் உருவாக்கக் கூடாது. யார் மரபை மீறிய வார்த்தைகளை பேசினாலும், அதை அவர் நீக்கி வருகிறார். பாட்டு பாடுவது ஒன்றும் இந்த அவைக்கு புதுசு கிடையாது. அதிமுக, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த காலங்களில் பாட்டு பாடி இருக்கின்றனர்" எனத் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவருக்கு மரியாதை வழங்க வேண்டும்
முன்னாள் முதலமைச்சரும், போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம், "அமைச்சர்களுக்கு என்ன மரியாதை உள்ளதோ, அதே மரியாதை எதிர்கட்சித்தலைவருக்கும் உள்ளது. சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவருக்கு பேச வாய்ப்பளிக்கும் அதே நேரத்தில், மற்ற எம்.எல்.ஏ.க்களுக்கும் பேச வாய்ப்பளிக்கிறார். இதனால் எதிர்கட்சித்தலைவர் மூன்று முறை எழுந்து அமர்கிறார். ஆகையால் எதிர்க்கட்சித் தலைவருக்கான மரியாதையை முறையாக வழங்க வேண்டும்" என்று கோரினார்.
விளக்கமளித்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், "எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஆளும் கட்சியாக இருந்தாலும் ஆதாரத்துடன் கூறப்படும் கருத்துக்கள்தான் அவை குறிப்பில் இடம்பெறும். அப்போதுதான் அவை மாண்பைக் காப்பாற்ற முடியும். ஆதாரம் இல்லாமல் கருத்தை பேரவையில் பதிவுச்செய்யும் போது அதை நீக்குவது எனது மரபு. எதிர்க்கட்சித் தலைவர் கூறிய கருத்தை எடுத்துக்கொண்டு உரிமை குழுவிற்கு ஆய்விற்காக அனுப்ப இருக்கிறேன். ஆதாரம் இல்லாமல் யாரும் பேசக்கூடாது; ஆதாரத்தை வைத்துக்கொண்டு தான் பேரவையில் பேச வேண்டும். போகிற போக்கில் அள்ளி தெளித்துவிட்டு போகிற இடம் அல்ல இது. புதிய அரசியல் மேடைகளில் பேசக்கூடிய பேச்சுகளை இங்கே பேசக்கூடாது.
மக்களுக்கு உதவாத, அவையின் மாண்பை குறைக்கின்ற வகையில் இருக்கும் எந்த வார்த்தையாக இருந்தாலும் நான் அவை குறிப்பில் இருந்து நீக்குவேன். மக்களுக்கு பயன்படாத வார்த்தைகளை மட்டுமே நான் அவை குறிப்பிலிருந்து நீக்குகிறேன். உங்களுக்கு எப்படி (திமுக) இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறதோ? அதேபோல்தான் அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது" என்றார்.