தமிழறிஞர் சாலமன் பாப்பையா உடல் அரசு மரியாதையுடன் தகனம்: அரசியல் கட்சியினர், பொதுமக்கள் பிரியாவிடை
தமிழறிஞர் சாலமன் பாப்பையா உடல் அரசு மரியாதையுடன் தகனம்: அரசியல் கட்சியினர், பொதுமக்கள் பிரியாவிடை
மதுரை: மூத்த தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் தத்தனேரி மின் மயானத்தில் நேற்று தகனம் செய்யப்பட்டது. இதில் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டு பிரியா விடை அளித்தனர். மதுரை, ஆரப்பாளையம், ஞானஒளிவுபுரத்தை சேர்ந்தவர் சாலமன் பாப்பையா (90). மூத்த தமிழறிஞர், பட்டிமன்ற நடுவர். வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், நேற்று முன்தினம் காலமானார். இவரது உடல் ஞானஒளிவுபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், பொதுமக்கள், தமிழறிஞர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள், திமுக முன்னாள் அமைச்சர்கள் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
நேற்று காலை சாலமன் பாப்பையாவின் உடல், அவரது வீட்டிலிருந்து புட்டுத்தோப்பு ரோட்டில் உள்ள மங்களபுரம் சிஎஸ்ஐ வெப் மெமோரியல் சர்ச்சுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு கிறிஸ்தவ போதகர்கள் பிரசங்கம் நடத்தி இறுதி சடங்கிற்கான ஜெபம் செய்தனர். சர்ச்சில் நடைபெற்ற வழிபாட்டில் சாலமன் பாப்பையாவின் மகள் விமலா சாலமன், மகன் தியாகமூர்த்தி, உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பிரார்த்தித்தனர். தமிழுக்காகவும், தமிழ் இலக்கியத்திற்காகவும் வாழ்நாள் முழுவதும் பணியாற்றிய சாலமன் பாப்பையாவின் மறைவை நினைத்து பலரும் கண்ணீர் மல்க பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து அவரது உடல் தத்தேனரி மின் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ஊர்வலத்தில் அரசியல் கட்சியினர், தமிழறிஞர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். வழிநெடுகிலும் திரண்ட பொதுமக்கள் சாலையின் இருபுறங்களிலும் நின்று இறுதி அஞ்சலி செலுத்தினர். மேலும், ‘வாழ்க தமிழ்... வாழ்க தமிழ்...’ என முழக்கமிட்டும் சாலமன் பாப்பையாவின் தமிழ் பணியை நினைவு கூர்ந்தனர்.
தத்தனேரி மின் மயானத்தில் நேற்று பகல் 12.45 மணியளவில் அமைச்சர்கள் நிர்மல்குமார், விஸ்வநாதன், கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் போலீசாரின் அரசு மரியாதை வழங்கப்பட்டது. குண்டுகள் முழக்கம் இல்லாமல், துப்பாக்கி ஏந்திய காவலர்கள் அணிவகுப்பு நடத்தி அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து சாலமன் பாப்பையாவின் உடல் மின் மயானத்திற்குள் கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. அஸ்தியை குடும்பத்தினர் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியில் உள்ள வைகை ஆற்றிற்கு கொண்டு சென்று கரைத்தனர். இந்த அஸ்தி கரைத்த புனித நீர் கொண்டு வரப்பட்டு, சாலமன் பாப்பையா மனைவி ஜெயாபாய் அடக்கம் செய்யப்பட்டிருந்த கல்லறை மீது தெளிக்கப்பட்டது.
மதுரையின் அடையாளப் பெருமைக்குரியவராக விளங்கிய ஒரு தமிழறிஞரின் பிரிவால் மதுரை மாநகரமே சோகத்தில் மூழ்கியது.