📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 15, 2026 06:01 PM

தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்படும்

தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்படும்

தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்படும் - அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார் திட்டவட்டம்

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த குடும்பத்திற்கு அரசுப் பணி கிடைக்கக்கூடாது என திரும்பத் திரும்ப ஒரு சில கட்சிகள் போராடிக் கொண்டிருக்கிருப்பதை வன்மையாக கண்டிப்பதாக அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார் கூறினார்.

Published : August 15, 2026 at 5:43 PM IST

சென்னை: எந்தக் காலத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்படும் என அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

80 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை துறைமுகத்தில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்து நடைபெற்றது. இந்த சமபந்தி விருந்தில் சட்டம் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பொதுமக்களுக்கு உணவு பரிமாறி, அவர்களுடன் அமர்ந்து சமபந்தி விருந்தில் பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "80ஆவது சுதந்திர தின விழாவில், மக்கள் விரும்பிய மாற்றத்தின் அடிப்படையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் விஜய் அவர்கள் கோட்டையில் கொடி ஏற்றியுள்ளார். மாற்றத்தை நோக்கி மக்கள் முழுமையாக நம்பிக்கையுடன் கொண்டு வந்த முதல்வர் விஜய் தலைமையிலான அரசு இது.

முதலமைச்சர் விஜய் கோட்டையில் கொடி ஏற்றியது தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் ஏற்றியதற்கு சமம், இன்று அனைத்து அமைச்சர்களும் சமபந்தி விருந்தில் பங்கேற்று வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக நான் காளிகாம்பாள் கோவிலில் சமபந்தி விருந்தில் பங்கேற்றுள்ளேன்" என்றார்.

நீதிமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது குறித்து எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, "நீதி அரசர்கள், வழக்கறிஞர் சங்கங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து உயர்நீதிமன்றத்தில் பாடப்பட்டது. அதில் நானும் கலந்து கொண்டேன். எதனால் இதை மத்திய அரசு மாற்றினார்கள் என்று கவனிக்க வேண்டும். இருக்கும் ஒரு விஷயத்தை மாற்றுவது தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்தும்.

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு மொழி சார்ந்த பாடல் பாடப்பட்டு தேசிய பாடல், தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் தான் அந்தந்த மாநிலங்களில் பாடப்பட வேண்டும். இருக்கிற வழக்கத்தை ஏன் மாற்ற வேண்டும்? அதனால் ஏன் இவ்வளவு சர்ச்சை? கண்டிப்பாக எந்த காலத்திலும் தமிழ்நாடு முதலமைச்சர் அனுமதிக்க மாட்டார்? தமிழ்த் தாய் வாழ்த்து தான் முதலில் பாடப்படும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.

தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த கனவுதான் எங்கள் முதலமைச்சர் விஜய். மக்கள் எப்படி ஒரு மாற்றம் வேண்டும் என எதிர்பார்த்து இருந்தார்கள். அதுதான் இப்போது அமைந்திருக்கிறது.

ஓர் அரசாணை வந்தால் அது அனைத்து மக்களுக்கும் தெரிகிறது. இப்படிப்பட்ட மாற்றம் யாராவது வருமா என்று மூன்று தலைமுறையாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த மாற்றம் இப்போது ஏற்பட்டுள்ளது. தமிழக மக்களுடைய கனவுதான் தவெக-வின் கனவு என தெரிவித்தார்.

இன்று முதலமைச்சர் புதிதாக அறிவிப்புகளை வெளியிட்டிருக்கின்றார். மானியக் கோரிக்கைகளில் ஏதாவது புதிய அறிவிப்பை எதிர்பார்க்கலாமா என்ற கேள்விக்கு, முதலமைச்சர் எந்த நேரத்தில் என்ன தேவை என்பது குறித்து ஆராய்ந்து கொண்டிருக்கின்றார். ஒரு நாளைக்கு 12 மணி நேரம் ஆய்வுக் கூட்டங்கள் மட்டுமே நடைபெற்று வருகின்றன.

மக்களுக்கு என்னென்ன தேவையோ, அவற்றை உடனடியாக அடுத்த நொடியே அமல்படுத்தி வருகின்றார். அதற்காகத்தான் அரசும் செயல்பட்டு வருகிறது" என்றார்.

கரூர் சம்பவத்தில் 31 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கு தடை விதித்த மதுரை கிளை உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, "கண்டிப்பாக அது வரவேற்கத்தக்கது. நாங்கள் சட்டரீதியாக என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்வோம். ஏற்கனவே 1983-இல் நடைபெற்ற கலவரத்தில் வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் எந்தத் தவறும் நடைபெறவில்லை. தமிழக மக்கள் அனைவராலும் வரவேற்கப்பட்டதுதான். இதைத் திரும்பத் திரும்ப ஒரு சில கட்சிகள் அந்த மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கக் கூடாது என்பதற்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் எங்களுடைய கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்" என தெரிவித்தார்.