தங்க மோதிரத் திட்டம்: இரு நிறுவனங்களுக்குப் பணி ஆணை
சென்னை: ‘தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தின்கீழ்’ நகைகளை விநியோகிக்க ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜூவல்லர்ஸ் ஆகிய நிறுவனங்களுக்குத் தமிழ்நாடு அரசு பணி ஆணை வழங்கியுள்ளது.
முதலமைச்சர் விஜய்யால் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தின்கீழ், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது.
தமிழர்களின் பாரம்பரியத் தாய்மாமன் சீர் மரபைப் போற்றும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான வரும் செப்டம்பர் 15ஆம் தேதியன்று இத்திட்டம் முறைப்படி தொடங்கி வைக்கப்பட உள்ளது.
வெற்றித் தமிழகம் தொலைநோக்குத் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியதன் கீழ், ஜூன் 22ஆம் தேதி முதல் பிறந்த குழந்தைகள் இத்திட்டத்தில் பயன்பெறுவர்.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இத்திட்டம் தாய்மையைக் கொண்டாடும் வகையிலும் சுகாதாரச் சேவைகளில் மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் நோக்கிலும் அமையும்,” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு கிராம் எடையுள்ள 4,41,667 தங்க மோதிரங்களை வழங்குவதற்காக ஜூலை 14ஆம் தேதியன்று தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழகத்தால் இணையம் வாயிலாக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன.
இதில் 11 முன்னணி நகை நிறுவனங்கள் பங்கேற்றன.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
அப்போது, ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் 1 பைசா மட்டுமே கட்டணமாகக் கோரி மிகக் குறைந்த விலைப்புள்ளியை அளித்தது.
ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளி சட்ட விதிகளின்படி, பிற நிறுவனங்களிடம் கேட்கப்பட்டதில் கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனம் மட்டுமே அவ்விலையை ஏற்க ஒப்புதல் தெரிவித்தது.
இதனையடுத்து, அடுத்த நான்கு மாதங்களுக்குத் தேவையான 1,28,499 தங்க மோதிரங்களை விநியோகிக்க இவ்விரு நிறுவனங்களுக்கும் பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, மிகக் குறைந்த விலைப்புள்ளி அளித்த ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்திற்கு 70 விழுக்காட்டுப் பங்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதே விலையை ஏற்க ஒப்புக்கொண்ட கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்திற்கு 30 விழுக்காட்டுப் பங்கும் 70:30 எனும் அடிப்படையில் பிரித்து அளிக்கப்பட்டுள்ளது.