📅 Thursday, 27 August 2026 IST | ஆவணி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 27, 2026 04:00 AM

‘சொற்கள்’ தமிழ்க் கற்றல் இலவசத் தளத்தின் அதிகாரபூர்வ வெளியீடு

‘சொற்கள்’ தமிழ்க் கற்றல் இலவசத் தளத்தின் அதிகாரபூர்வ வெளியீடு

கல்வி, கணினித் துறைகளில் 40 ஆண்டு அனுபவம் கொண்ட கல்வியாளர் பி.எம்.ஏ. அமானுல்லாஹ், 62, தம்முடைய இலவசத் தமிழ் கற்றல் தளத்தை மேம்படுத்தி, ‘சொற்கள்’ (https://www.sorkkal.com/) என்னும் பெயரில் பதிவுசெய்து அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார்.

இத்தளத்தில் தமிழ் எழுத்துப் பயிற்சி, சொற்களைப் படித்தல், ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களைப் பொருத்துதல், குறுக்கெழுத்துப் போட்டிகள், ஆத்திசூடி, பழமொழிகள், மரபுத் தொடர் என 47க்கும் மேற்பட்ட வடிவமைக்கப்பட்ட பயிற்சிகளும், தமிழ் விளையாட்டுகளும் உள்ளன. கணினி, திறன்பேசி போன்ற பல்வேறு மின்னணுக் கருவிகளில் இத்தளத்தை எளிமையாகப் பயன்படுத்தலாம்.

“தற்போதைய பதிப்பின் ஒரு முக்கிய அம்சம் செயலியின் கையெழுத்து அறிதல் ஆகும். ஒரு சொல் திரையில் தோன்றினால், பிள்ளைகள் அதனைத் தொடுதிரையில் நேரடியாக எழுத முடியும். அது சரியா என்பதற்கான பின்னூட்டத்தை இணைய உலாவி உடனடியாக வழங்குகிறது. மேலும், செயலியில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் தெளிவான ஒலி எழுப்பும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது, பிள்ளைகள் எளிதாகக் கற்பதற்கு வழிவகுக்கிறது,” என்றார் திரு அமானுல்லாஹ்.

மொழி கற்றல் என்பது கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் ஆகிய நான்கு கூறுகளை உள்ளடக்கியது. தளத்தில் உள்ள 47 விளையாட்டுகளும் செயல்பாடுகளும் இந்நான்கு கூறுகளின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டுள்ளன என்றும் சொற்றொகுப்பில் 400க்கும் மேற்பட்ட பொருத்தமான சொற்கள் கைமுறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் விளக்கினார்.

இச்செயலியின் முதல் பதிப்பு வெளியானபோது அதில் மாணவர்களுக்குப் பயன்படக்கூடிய பல தமிழ்ச் சொற்களும், தமிழை எளிதாகக் கற்கப் பயனுள்ளதாக இருந்ததாகவும் செங்காங்கில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையான திரு மாலிக் கூறினார்.

“எனது இளைய மகன் தொடக்கநிலை 6ஆம் வகுப்பில் படிக்கிறான். இந்தத் தமிழ் கற்றல் தளத்தைப் பயன்படுத்துவதால் இப்போது அவனுக்குத் தமிழ் கற்றலும் வீட்டுப்பாடங்களும் எளிதாக உள்ளன. சமூக மன்றத்தில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி நடைபெற்றபோது குழுவில் உள்ள பெற்றோரிடம் இதனைப் பற்றிப் பகிர்ந்துகொண்டோம். என் மகன் போன்று தொடக்கப் பள்ளி இறுதி ஆண்டு தமிழ்த்தேர்வுக்கு ஆயத்தமான மாணவர்களுக்கு இந்தத் தமிழ் கற்றல் தளம் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது,” என்று அவர் சொன்னார்.

மாணவர்கள், பெற்றோர் என அனைத்து வயதினரும் தமிழ் கற்றலில் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் ‘சொற்கள்’ தளம் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.