📅 Thursday, 13 August 2026 IST | ஆடி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 12, 2026 04:03 AM

தவெக ஆட்சியில் கடன் சுமை ரூ.20 லட்சம் கோடியாக உயரும்: பேரவையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

தவெக ஆட்சியில் கடன் சுமை ரூ.20 லட்சம் கோடியாக உயரும்: பேரவையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

தவெக ஆட்சியில் கடன் சுமை ரூ.20 லட்சம் கோடியாக உயரும்: பேரவையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

"புதிதாக ஒரு திட்டத்தைக் கொண்டு வந்து, அதற்கு உங்கள் விருப்பப்பட்ட பெயரை வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், ஏற்கனவே இருக்கும் திட்டத்திற்கு பெயர் மட்டும் மாற்றுவதை ஏற்க முடியாது" என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Published : August 11, 2026 at 10:31 PM IST

சென்னை: தவெக ஆட்சியில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் கடன் சுமை ரூ.10 லட்சத்தில் இருந்து 20 லட்சம் கோடியாக உயரும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தில் எடப்பாடி பழனிசாமி பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார். அவர் பேசுகையில், தவெக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் என்பது வெறும் வார்த்தை ஜால பட்ஜெட்டாகவே அமைந்துள்ளது. நிதி மேலாண்மையை சரிசெய்யும் எந்த திட்டங்களும் பட்ஜெட்டில் இல்லை.

நீங்கள் அறிவித்த புதிய திட்டங்களில் ரூ.8,840 கோடி தான் வருகிறது. வருவாய் பற்றாக்குறை ரூ.48,696 கோடியில் இருந்து ரூ.55,000 கோடியாக உயர்ந்துள்ளது.

பட்ஜெட்டில் வருவாய் பெருக்குவதற்கான எந்த செயல் திட்டமும் இல்லை மாநிலத்தின் சொந்த வரி வருவாய் உயரவில்லை.

ஆட்சி பொறுப்பேற்ற மூன்றே மாதங்களில் தமிழக அரசு ரூ.27,000 கோடி கடன் பெற்றுள்ளது. அடுத்த 5 ஆண்டுகாலம் இதே நிலை நீடித்தால் தமிழகத்தின் கடன் சுமை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சம் கோடியாக உயர்ந்து விடும்.

அதேபோல, இந்த பட்ஜெட்டில் எந்த புதிய திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. அதிமுக ஆட்சியில் செயல்படுத்த திட்டங்களுக்கு 'வெற்றி' என்ற அடைமொழியைதான் கொடுத்துள்ளீர்கள். இதனால் மக்களுக்கு எந்த வெற்றியும் கிடைக்கப் போவதில்லை. மக்களுக்கு குழப்பமே ஏற்படும்.

புதிதாக ஒரு திட்டத்தைக் கொண்டு வந்து, அதற்கு உங்கள் விருப்பப்பட்ட பெயரை வைப்பதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஆனால், ஏற்கனவே இருக்கும் திட்டத்திற்கு பெயர் மட்டும் மாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மாற்றம் கொண்டு வருவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த நீங்கள், மக்களின் குறைகளை தீர்ப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.

பேசாமலேயே செயல்படுவது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் சில விஷயங்களில் பேசினால்தான் தீர்வு கிடைக்கும். இனிமேலாவது பேசி தீர்வைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பல துறைகளில் காலிப்பணியிடங்கள் உள்ளன. அவற்றை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அப்பொழுதுதான் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற முடியும்.

மழைக்காலங்களில் ஒழுகும் அரசு பேருந்துகள் நிறைய உள்ளன. அதனை சரி செய்ய வேண்டும்.

அனைத்து அரசு பேருந்துகளிலும் ஏசி வசதி என்பது சாத்தியமில்லாதது. சாதாரண பேருந்துகளை தரம் உயர்த்தினாலே மக்கள் பாராட்டுவார்கள்.

இந்த ஆண்டு 1000 பேருந்துகளை வாங்குவோம் எனக் கூறினீர்கள். இந்த ஆண்டு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. அடுத்த 4 ஆண்டுகளில் எத்தனை பேருந்துகளை வாங்க போகிறீர்கள்? இது இயலாத காரியம்.

விவசாயிகளின் பிரச்சனைகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும். அதிமுக ஆட்சியில் இரண்டு முறை விவசாயிகளுக்கான பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஜெயலலிதாவின் ஆட்சியில் பயிர் கடன் முழுவதுமாக தள்ளுபடி செய்யப்பட்டது.

ஆனால் புதிதாக பொறுப்பேற்ற அரசு, தேர்தல் வாக்குறுதிபடி, பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை. எனவே, தேர்தல் வாக்குறுதிபடி, சிறு, குறு விவசாயிகளுக்கு பயிர் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்" என எடப்பாடி பழனிசாமி பேசினார்.