உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்.. இந்திய அணி பைனலுக்கு செல்லும் வாய்ப்பு போச்சு? புள்ளி பட்டியல் விவரம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்.. இந்திய அணி பைனலுக்கு செல்லும் வாய்ப்பு போச்சு? புள்ளி பட்டியல் விவரம்
கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றிய போதிலும், கொழும்பில் நடைபெற்ற இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இது இந்தியாவிற்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஃபாலோ-ஆன் கொடுத்த பிறகும் இந்திய அணியால் வெற்றியைப் பதிவு செய்ய முடியாமல் போனது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் சோனல் தினுஷா ஆட்டத்தை டிரா செய்ய முக்கிய காரணமாக அமைந்தார். கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், 1997-க்குப் பிறகு ஒரு டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசிய முதல் இலங்கை வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை சோனல் தினுஷா படைத்தார்.
இதன் மூலம் ஆட்டத்தை டிரா செய்து இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை இலங்கை தடுத்து நிறுத்தியது.முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 503 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதற்குப் பதிலளித்த இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 290 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 213 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஃபாலோ-ஆன் பெற்ற இலங்கை அணி, இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
அவர்கள் 9 விக்கெட் இழப்பிற்கு 429 ரன்கள் எடுத்திருந்தபோது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தனர். முதல் இன்னிங்ஸில் 162 பந்துகளில் 103 ரன்கள் எடுத்த தினுஷா, இரண்டாவது இன்னிங்ஸிலும் அசத்தலாக விளையாடி 264 பந்துகளில் 133 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தால் 12 புள்ளிகளைப் பெற்றிருக்கலாம். மேலும் அவர்களின் புள்ளி வெற்றி சதவீதம் 63.33 ஆக உயர்ந்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் நான்காவது இடத்திற்கு முன்னேறியிருக்க முடியும். ஆனால், இந்த டிரா காரணமாக இந்தியாவும் இலங்கையும் தலா நான்கு புள்ளிகளை மட்டுமே பகிர்ந்து கொண்டன.
இதன் விளைவாக, இந்திய அணியின் புள்ளி 53.33 சதவீதத்தில் இருந்து 51.51 சதவீதமாகக் குறைந்துள்ளது. இருப்பினும், அவர்கள் WTC தரவரிசையில் தொடர்ந்து 5-வது இடத்திலேயே நீடிக்கின்றனர். மறுபுறம், இலங்கையின் PCT 33.33 சதவீதமாகவும், அவர்களின் 6-வது இடமும் எந்த மாற்றமுமின்றி அப்படியே நீடிக்கிறது.
வங்கதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா பெற்ற அபார வெற்றி, அவர்களின் PCT-ஐ 80 ஆக உயர்த்த உதவியதுடன், தரவரிசைப் பட்டியலில் அவர்களின் முதலிடத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. நடப்பு சாம்பியனான தென் ஆப்பிரிக்கா 75 சதவீத PCT உடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. நியூசிலாந்து மூன்றாவது இடத்திலும், வங்கதேசம் நான்காவது இடத்திலும் உள்ளன.
இந்திய அணி அடுத்ததாக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கவனம் செலுத்தவுள்ளது. அதன்பிறகு, நவம்பர் மாதத்தின் மத்தியில் நடைபெறவுள்ள நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் போதுதான் இந்திய அணி தனது அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாடும். தற்போதைய WTC சைக்கிளில் இந்தியாவிற்கு இன்னும் 7 டெஸ்ட் போட்டிகள் மீதமுள்ளன. இதில் நியூசிலாந்துக்கு எதிராக 2 போட்டிகளும், சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகளும் அடங்கும். இதில் இந்திய அணி 6 போட்டிகளாவது வெல்ல வேண்டும். இதனால் இந்தியாவின் தகுதி வாய்ப்பு பறிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவை போலவே இலங்கை அணியும் தனது அடுத்த டெஸ்ட் போட்டியை நவம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடவுள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. தற்போதைய சைக்கிளில் இலங்கைக்கு இன்னும் நான்கு டெஸ்ட் போட்டிகள் மீதமுள்ளன. இதில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு எதிராக தலா இரண்டு போட்டிகளில் அந்த அணி விளையாடவுள்ளது.