உலக யானைகள் தினத்தில் நேர்ந்த சோகம்: தமிழக
உலக யானைகள் தினத்தில் நேர்ந்த சோகம்: தமிழக - கேரள எல்லையில் ரயில் மோதி 2 யானைகள் உயிரிழப்பு
ஏஐ மற்றும் ட்ரோன் கேமரா மூலம் யானைகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருவதால், தமிழ்நாடு வனப்பகுதிக்குள் ரயில் மோதி யானைகள் உயிரிழப்பது மிகவும் குறைவாக பதிவான நிலையில், இந்த சோக நிகழ்வு அரங்கேறியுள்ளது.
Published : August 13, 2026 at 7:39 AM IST
கோயம்புத்தூர்: தமிழ்நாடு - கேரளம் எல்லையில் ரயில் மோதி தாய் மற்றும் குட்டி என 2 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன. அதிவேகமாக ரயில் இயக்கப்பட்டது தான் யானைகள் உயிரிழப்பிற்கு காரணமா? என வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு - கேரளம் எல்லையையொட்டி அமைந்துள்ள பாலக்காடு மாவட்டத்தின் வாளையார் பகுதியில் 4 யானைகள் கொண்ட கூட்டம், நேற்று புதன்கிழமை (ஆகஸ்ட் 12) இரவு ரயில் பாதையை கடந்துள்ளது. அப்போது அவ்வழியாக வந்த மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் யானைகள் மீது மோதியது. இந்த விபத்தில் ரயில் என்ஜின் சக்கரங்களில் சிக்கி தாய் மற்றும் குட்டி என 2 யானைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.
ரயில் மோதி இரண்டு யானைகள் உடல் நசுங்கி கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், வாளையாறு வனத்துறையினர் மற்றும் பாலக்காடு ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து யானைகளின் உடல்களை மீட்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
ரயில் சேவை பாதிப்பு
இரவு 11.45 மணியளவில் ரயில் மோதிய நிலையில் அதிகாலை 4 மணிக்கு தாய் மற்றும் குட்டி யானையின் உடல்கள் பொக்கலைன் இயந்திரங்கள் மூலம் மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரயில் என்ஜின் சரி செய்யப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த விபத்து காரணமாக தமிழ்நாடு - கேரளம் இடையே இயக்கப்படும் முக்கிய ரயில் சேவைகள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டன.
மேலும் ‘பி’ டிராக்கில் கேரளாவில் இருந்து கோவை வரும் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, அந்த வழியாக செல்லும் ரயில்கள் ‘ஏ’ டிராக் வழியாக மாற்றி இயக்கப்பட்டன. ஏற்கனவே கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இதே மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் மோதி கருவுற்ற பெண் யானை உள்பட 3 யானைகள் அதே பகுதியில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
ரயில் வேகமாக இயக்கப்பட்டது தான் விபத்துக்கு காரணமா? என்ற கோணத்தில் கேரள வனத்துறையினரும் ரயில்வே துறையினரும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரளத்தில் நடவடிக்கை தேவை
உலக யானைகள் தினத்தன்று தாய் மற்றும் குட்டி யானை ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் வன உயிரின ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வன உயிரின செயற்பாட்டாளர்கள் கூறுகையில், “தமிழ்நாடு வனப்பகுதியில் ஏஐ கேமரா மூலம் வனத்திலிருந்து யானைகள் வெளியே வருவது கண்காணிக்கப்பட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டப்படுகிறது. ரயில் தண்டவாளங்களை யானைகள் கடக்கும்போது எச்சரிக்கை வழங்கப்பட்டு, யானைகள் ரயிலில் அடிபடுவதும் தடுக்கப்படுகிறது. இதே போன்ற முறையை கேரள வனப்பகுதியிலும் செயல்படுத்த வேண்டும்” என வலியுறுத்தி உள்ளனர்.
விபத்து நடைபெற்ற இடத்திலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் தான் தமிழ்நாடு எல்லை அமைந்துள்ளது. தமிழ்நாடு வனப்பகுதியை பொருத்தவரை, மதுக்கரை வனச்சரகத்தில் ரயில் பாதை செல்லும் இரண்டு தடங்களிலும் 16 கோடி ருபாய் செலவில் ஏஐ கேமரா மற்றும் ட்ரோன் கேமரா மூலம் யானைகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருவதால், தமிழக வனப்பகுதிக்குள் ரயில் மோதி யானைகள் உயிரிழப்பது மிகவும் குறைவாக உள்ளது.
தமிழ்நாட்டில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள்
கோயம்புத்தூரில் இருந்து கேரளம் மாநிலத்துக்கு போத்தனூர், வாளையார் பகுதிகள் வழியாக இயக்கப்படும் ரயில்கள் மதுக்கரை வனப்பகுதி வழியாக செல்கின்றன. இந்த வழியாக ரயில்கள் வந்து செல்வதற்கு வசதியாக ஏ, பி என்று இரண்டு ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், ஏ ரயில் பாதை 2.9 கி.மீ தூரம், பி ரயில் பாதை 4.15 கி.மீ தூரம் வனப்பகுதிக்குள் அமைந்துள்ளன. இதேபோல கேரள மாநிலத்திற்குள்பட்ட வாளையார் முதல் கஞ்சிக்கோடு வரையிலான ரயில் பாதைகள் வனப்பகுதி வழியாக செல்கின்றன.
இதனால் ரயில் தண்டவாளங்களுக்கு வரும் காட்டு யானைகள், ரயில் மோதி உயிரிழப்பது தொடர்ந்து வந்தன. மதுக்கரை முதல் கஞ்சிகோடு வரையிலான பகுதியில் கடந்த 20 ஆண்டுகளில் 35 காட்டு யானைகள் ரயில் மோதி, பரிதாபமாக உயிரிழந்துள்ளன. இதனைத் தடுக்க பாலக்காடு ரயில்வே நிர்வாகமும், வனத்துறையும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ள மதுக்கரை பி ரயில் பாதையில் வாளையாறு - எட்டிமடை இடையே இரண்டு இடங்களில் காட்டு யானைகள் கடந்து செல்வதற்காக சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு காமிரா உதவியுடன் காட்டு யானைகள் நடமாட்டத்தை 24 மணி நேரமும் கண்டறிந்து எச்சரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக 12 டவர்கள் அமைக்கப்பட்டு 24 ஏஐ கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 7.05 கிமீ தூரம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழக வனப்பகுதிக்குள் ரயில் மோதி யானைகள் உயிரிழப்பது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அருகில் உள்ள கேரள வனப்பகுதியில் யானைகளை கண்காணிக்க இது போன்ற நவீன கருவில் ஏதும் பயன்படுத்தப்படாமல் உள்ளதால் ரயில் மோதி யானைகள் உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது.