UPI-யில் இனி பணம் அனுப்பினால் கட்டணமா?
UPI-யில் இனி பணம் அனுப்பினால் கட்டணமா? - புதிய சட்டம் என்ன சொல்கிறது?
UPI பரிவர்த்தனைகளுக்கு விரைவில் கட்டணம் வரவிருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின.
UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படலாம் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், 'Payment and Settlement Systems' சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது.
இந்தச் சட்டத் திருத்தம் UPI-க்கு உடனடியாக கட்டணம் விதிப்பதற்கானது அல்ல என்றும், எதிர்காலத்தில் குறிப்பிட்ட டிஜிட்டல் கட்டண முறைகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க அரசுக்கு அதிகாரம் வழங்குவதற்காக மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் Press Information Bureau (PIB) விளக்கம் அளித்துள்ளது.
சமூக வலைத்தள வதந்தியும் PIB விளக்கமும்
பொதுமக்கள் தற்போது பயன்படுத்தும் UPI பரிவர்த்தனைகளுக்கு எந்தக் கட்டணமும் விதிக்கப்படவில்லை என்றும், புதிய சட்டத் திருத்தம் உடனடியாக எந்தக் கட்டணத்தையும் அமல்படுத்தவில்லை என்றும் அதில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
புதிய சட்டத் திருத்தம் சொல்வது என்ன?
இந்த மாற்றம் 'Payment and Settlement Systems (PSS) Act, 2007'-இன் பிரிவு 10A-ல் செய்யப்பட்ட திருத்தத்துடன் தொடர்புடையது. இதுவரை, குறிப்பிட்ட டிஜிட்டல் கட்டண முறைகளுக்கு 'Merchant Discount Rate' (MDR) வசூலிப்பதில் சில சட்டரீதியான கட்டுப்பாடுகள் இருந்தன.
தற்போது அந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், எந்தெந்த டிஜிட்டல் கட்டண முறைகளுக்கு கட்டணம் விதிக்கலாம் அல்லது விலக்கு அளிக்கலாம் என்பதை அரசே அறிவிப்பு மூலம் தீர்மானிக்கும் அதிகாரம் பெறப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரம் என்ன?
இதன் மூலம், தற்போதைய நிலையில் UPI பயன்படுத்தும் பொதுமக்கள் யாரும் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. மாறாக, எதிர்காலத்தில் தேவை ஏற்பட்டால் சில குறிப்பிட்ட பரிவர்த்தனை வகைகள் அல்லது வணிகப் பிரிவுகளுக்கு மட்டும் கட்டண முறையைக் கொண்டுவருவதற்கான சட்டரீதியான இடம் மட்டுமே தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.
யாருக்கு விலக்கு அளிக்கப்படும்?
அதேநேரத்தில், தனிநபர்களுக்கிடையேயான (P2P) பரிவர்த்தனைகள் மற்றும் சிறு வணிகர்களுக்கான பரிவர்த்தனைகள் எப்போதும் போலக் கட்டணமின்றித் தொடரும் என்பதே தற்போதைய நிலைப்பாடு.
பெரிய வணிக நிறுவனங்களின் உயர்மதிப்புள்ள பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே குறைந்த அளவிலான MDR கட்டணம் குறித்து எதிர்காலத்தில் அரசு பரிசீலிக்க வாய்ப்புள்ளது.
தற்போது சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டிருப்பது உண்மை என்றாலும், UPI பயன்படுத்தும் பொதுமக்களுக்கு உடனடியாக எந்தக் கட்டணமும் விதிக்கப்படவில்லை என்பதே இந்த விவகாரத்தில் அரசின் அதிகாரப்பூர்வ விளக்கமாகும்.