விரைவில் அறிவிப்பை வெளிடும் முதலமைச்சர் விஜய்! தலைமைச் செயலகத்தை வேறு இடத்திற்கு மாற்ற முடிவா?
விரைவில் அறிவிப்பை வெளிடும் முதலமைச்சர் விஜய்! தலைமைச் செயலகத்தை வேறு இடத்திற்கு மாற்ற முடிவா?
சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகத்தை மாற்றுவதற்காக அரசு தரப்பில் தற்போது கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலைய வளாகம், பட்டினம்பாக்கம், மற்றும் நந்தம்பாக்கம் ஆகிய 3 இடங்கள் பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published : September 1, 2026 at 11:48 AM IST
சென்னை: சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வரும் தலைமைச் செயலகத்தை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பான அறிவிப்பை, நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஜோசப் விஜய் விதி 110ன் கீழ் வெளியிட உள்ளதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகத்தை மாற்றுவதற்காக அரசு தரப்பில் தற்போது 3 இடங்கள் பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலைய வளாகம், பட்டினம்பாக்கம் மற்றும் நந்தம்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள இடங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன நிறுத்த வசதிகளை ஏற்படுத்தும் வகையில் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது. தலைமைச் செயலகத்திற்கான இடத்தை இறுதி செய்வதற்கு முன் வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், பரிசீலனையில் உள்ள இடங்களை நேரில் ஆய்வு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பல்வேறு அரசு திட்டங்களுக்காக வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகத்தை மாற்றும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதனிடையே, முதலமைச்சர் மற்றும் அவரது செயலர்களின் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்திற்கு மாற்றவும் அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. செயின்ட் ஜார்ஜ் கோட்டை பிரதான கட்டிடம், இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அங்கு தேவையான மாற்றங்களை மேற்கொள்வதில் கட்டுப்பாடுகள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகத்தை மாற்றுவது தொடர்பாக ஏற்கனவே பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2003ஆம் ஆண்டு சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகத்திற்கான புதிய வளாகம் அமைக்க திட்டமிட்டார். ஆனால் அந்த திட்டம் நடைமுறைக்கு வரவில்லை.
அதன்பின்னர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, ஓமந்தூரார் அரசு எஸ்டேட்டில் புதிய வளாகத்தை கட்டி, 2010ஆம் ஆண்டு சட்டப்பேரவையை அங்கு மாற்றினார். ஆனால், 2011ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, அந்த வளாகத்தை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக மாற்றி, சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகத்தை மீண்டும் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.