📅 Wednesday, 02 September 2026 IST | ஆவணி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 02, 2026 03:03 AM

முதலமைச்சர் விஜய் அமெரிக்க அதிபராக கூட ஆகலாம்: எடப்பாடி பழனிசாமி கிண்டல்

முதலமைச்சர் விஜய் அமெரிக்க அதிபராக கூட ஆகலாம்: எடப்பாடி பழனிசாமி கிண்டல்

முதலமைச்சர் விஜய் அமெரிக்க அதிபராக கூட ஆகலாம்: எடப்பாடி பழனிசாமி கிண்டல்

நிதி பற்றாக்குறை காரணமாக, ஆயுட்காலம் முடிந்த பேருந்துகளை இயக்கினால் எப்படி பாதுகாப்பு கிடைக்கும்? என எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பியுள்ளார்.

Published : September 1, 2026 at 11:18 PM IST

கோவை: முதலமைச்சர் விஜய் இந்தியாவின் பிரதமர் ஆகலாம்; குடியரசு தலைவர் ஆகலாம்; அவ்வளவு ஏன், அமெரிக்க அதிபராக கூட ஆகலாம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கிண்டலாக தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று (செப்டம்பர் 1) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழக வெற்றிக் கழக அரசு 5 ஆண்டுகள் நிலைக்காது என்பது அவர்களின் செயல்பாடுகளை வைத்தே தெரிகிறது. ஆட்சி பொறுப்பேற்று 110 நாட்களிலேயே செவிலியர்கள், மருத்துவர்கள், விவசாயிகள், பகுதி நேர ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துவிட்டது. அரிசி, சமையல் எண்ணெய், சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆட்சி பொறுப்பேற்ற பிறகு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது, விலைவாசி உயர்ந்துவிட்டது, அதிக அளவில் கடன் வாங்கியுள்ளனர். வருவாயை பெருக்குவதற்கான ஆக்கபூர்வமான திட்டங்கள் எதுவும் இல்லை. இவற்றை வைத்து பார்க்கும்போது இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நிலைக்காது" என்றார்.

முன்னதாக பேசிய அவர், "தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெறும் நிகழ்வுகள், சினிமாவில் சட்டமன்ற காட்சி எப்படி இருக்குமோ, அதுபோல இருக்கிறது. சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்தால்தான் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வருவது குறித்து மக்களுக்கு தெரியவரும்.

சபாநாயகர் தற்போது 10 மணி நேரம் சட்டமன்றத்தை நடத்துகிறார். அடுத்து 24 மணி நேரம் நடத்தினாலும் நடத்துவார். அனைவருக்கும் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படுவதை வரவேற்கிறோம். நாளை மறுநாள் காவல்துறை மானியக் கோரிக்கை நடைபெற உள்ளது. அப்போது தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்து பேச உள்ளோம். சட்டம் ஒழுங்கு தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.

தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, போதைப்பொருள் நடமாட்டம், பாலியல் குற்றங்கள் உள்ளிட்டவை அதிகரித்துள்ளன. நிர்வாக சீர்கேட்டின் காரணமாக குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

போக்குவரத்துத்துறையில் உள்ள விரைவு பேருந்துகளின் ஆயுட்காலம் 3 ஆண்டுகள் அல்லது 5 லட்சம் கிலோமீட்டர் ஆகும். இதை நிதி பற்றாக்குறை காரணமாக 5 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கிலோமீட்டராக மாற்றியிருக்கிறார்கள். ஆயுட்காலம் முடிந்த பேருந்துகளை இயக்கினால் எப்படி பாதுகாப்பு கிடைக்கும்?

தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி பணத்தை பறிமுதல் செய்து வருகிறது. சோதனை நடைபெற்ற இடங்களிலேயே இவ்வளவு பணம் சிக்குகிறது என்றால், சோதனை நடைபெறாத இடங்களில் எவ்வளவு இருக்கும்? தமிழ்நாடு முழுக்க ஊழல் நடைபெற்று வருகிறது" என விமர்சித்தார்.

இதையடுத்து, முதலமைச்சர் தனி விமானத்தில் வந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், "அவர் காஸ்ட்லி முதலமைச்சர். நாங்கள் விவசாயி. எனது நிலை வேறு, அவரது நிலை வேறு.

முதலமைச்சர் விஜய் இந்தியாவின் பிரதமராகலாம், குடியரசுத் தலைவராகலாம். ஏன் அமெரிக்க அதிபராக கூட ஆகலாம். அது அவருடைய விருப்பம்.

அதிமுகவில் இருந்து வெளியேறிய ஒரு சட்டமன்ற உறுப்பினர் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தொடர வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதிமுகவில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்திற்கு செல்வதால், அது செயல்படாது. இந்திய கூட்டணியில் அதிமுக தொடர்கிறது. உள்ளாட்சித் தேர்தல் வரும்போது அதுகுறித்து பார்க்கலாம்" என தெரிவித்தார்.