📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 16, 2026 12:30 PM

வடகொரிய வீரர்கள் எல்லை தாண்டியதால் எச்சரிக்கைத் துப்பாக்கிச்சூடு: தென்கொரியா

வடகொரிய வீரர்கள் எல்லை தாண்டியதால் எச்சரிக்கைத் துப்பாக்கிச்சூடு: தென்கொரியா

சோல்: வடகொரிய வீரர்கள் கடந்த வாரம் ராணுவ எல்லைக்கோட்டைத் தாண்டியதால் தென்கொரிய ராணுவம் எச்சரிக்கைத் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் அதனைத் தொடர்ந்து அவர்கள் பின்வாங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தென்கொரியாவின் யோன்ஹப் செய்தி நிறுவனம் பெயர் குறிப்பிடப்படாத மூலத்தைச் சுட்டி, ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 16) இதுகுறித்த செய்தியை வெளியிட்டுள்ளது.

ராணுவமற்ற மண்டலத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள ராணுவ எல்லைக்கோட்டை வடகொரிய வீரர்கள் பலர் கடந்ததாக அச்செய்தி தெரிவித்தது.

வடகொரிய வீரர்கள் அப்பகுதியில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்திருந்தபோது எல்லைக்கோட்டைக் கடந்திருக்கலாம் என்றும் அவர்கள் திரும்பிச் சென்ற பிறகு வேறு எந்த அசாதாரணச் செயல்பாடுகளும் பதிவாகவில்லை என்றும் அச்செய்தி குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்துக் கருத்தறிய சிங்கப்பூரில் உள்ள வடகொரியத் தூதரகத்தைத் தொடர்புகொண்டபோது உடனடியாகப் பதில் கிடைக்கவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

2025ஆம் ஆண்டு வடகொரியப் படைகள் 17 முறை ராணுவ எல்லைக்கோட்டைத் தாண்டியதாக யோன்ஹப் செய்தி குறிப்பிட்டுள்ளது.

1950-1953 கொரியப் போரானது அமைதி உடன்பாட்டிற்குப் பதிலாகத் தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தத்துடனேயே முடிந்ததால் இரு கொரியாக்களுக்கும் இடையே இன்னும் போர்ச்சூழல் நிலவுகிறது.