📅 Thursday, 24 September 2026 IST | புரட்டாசி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 24, 2026 06:00 PM

யுவன் இசையில் அடுத்து ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தை இயக்குகிறார் ராம்!

யுவன் இசையில் அடுத்து ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தை இயக்குகிறார் ராம்!

யுவன் சங்கர் ராஜா இசையில் அடுத்து ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தை இயக்க இருப்பதாக இயக்குநர் ராம் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இணை பிரியாமல் பயணிக்கும் ஒரு கூட்டணி இயக்குநர் ராம், யுவன் சங்கர் ராஜாவினுடையது. கடந்த 2007-ம் ஆண்டு வெளியான ‘கற்றது தமிழ்’ படத்தில் தொடங்கிய இவர்களின் பயணம் ‘தங்க மீன்கள்’, ‘தரமணி’, ‘பேரன்பு’, ‘பறந்து போ’ என நீண்டது.

இவர்களின் கூட்டணியில் தற்போது உருவாகி இருக்கும் ‘ஏழு கடல் ஏழு மலை’ என்ற படம் அக்டோபர் 1-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் செப்டம்பர் 23-ம் தேதி வெளியானது. இதன் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் ராம் தனது அடுத்தப் படம் குறித்த தகவலைப் பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறுகையில், ‘‘கற்றது தமிழ் படத்தின் கதையை நான் ஒரு முப்பது நிமிடம் அவரிடம் சொன்னேன். அதைக் கேட்டதும் நான் இசையமைக்கிறேன் என்றார். அந்தப் படம் முடிந்ததும் ‘கற்றது தமிழ்’ படத்துக்காக அவரிடம் போனேன். இந்தப் படத்தில் நான் தான் நடிக்கிறேன், போன படத்துக்கு கொடுத்த சம்பளம் கூட என்னால் கொடுக்க முடியாது. நான் வேறு நபரை வைத்து இசையமைத்துக் கொள்ளவா எனக் கேட்டேன்.

அதைப் பற்றி எல்லாம் ஏன் கவலைப்படுறீங்க. இந்தப் படத்துக்கும் நான்தான் இசையமைப்பேன் என்று சொன்னார். அப்படி தொடங்கிய பயணம் இப்போது, ‘ஏழு கடல் ஏழு மலை’ வரை வந்திருக்கிறது.

அவர் எனக்கு நோ சொன்னால் தான் நான் அடுத்த இசையமைப்பாளரைத் தேட வேண்டும். யுவன் என்னுடைய இசையமைப்பாளர் என்பதைக் கடந்து அவர் எனக்கு சிறந்த நண்பர், நலம் விரும்பி’’ என உருக்கமாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய இயக்குநர் ராம், ‘நம்முடைய அடுத்தப் படத்தைப் பற்றிச் சொல்லலாமா? அடுத்து நான் ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் படம் பண்ணுகிறேன். நேற்று முன்தினம் தான் நானும், யுவனும் அது பற்றி பேசினோம். அதற்கான வேலைகள் விரைவில் தொடங்கும்.

நான் நான்கு, ஐந்து கதைகள் சொன்னேன். யுவன் தான் அந்த ஜானரை தேர்ந்தெடுத்தார். எனவே, படம் நன்றாக வரவேண்டிய பொறுப்பு யுவனையேச் சேரும்’’ என்று தெரிவித்தார்.