📅 Saturday, 22 August 2026 IST | ஆவணி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 22, 2026 01:03 PM

110 மாவட்டங்கள்.. 70 வயதுக்கு மேல் ‘நோ’! திமுக செயற்குழு கூட்டத்தில் அதிரடி!

110 மாவட்டங்கள்.. 70 வயதுக்கு மேல் ‘நோ’! திமுக செயற்குழு கூட்டத்தில் அதிரடி!

110 மாவட்டங்கள்.. 70 வயதுக்கு மேல் ‘நோ’! திமுக செயற்குழு கூட்டத்தில் அதிரடி!

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் திமுக சந்தித்த பின்னடைவைத் தொடர்ந்து, கட்சியை அடிமட்டம் வரை வலுப்படுத்தும் வகையில் உள்கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தொகுதி வாரியாக ஆய்வு நடத்த 38 குழுக்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் அறிக்கைகள் கட்சித் தலைமையிடம் சமர்ப்பிக்கப்பட்டன.

இந்த அறிக்கைகளை ஆய்வு செய்து, கட்சியில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களைப் பரிந்துரைப்பதற்காக தங்கம் தென்னரசு தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவும் தனது பரிந்துரை அறிக்கையை ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்திலேயே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்துள்ளனர்.

இந்த நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக செயற்குழுக் கூட்டத்தில், கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டன. கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது, கட்சியின் மாவட்ட அமைப்பில் முக்கிய மாற்றங்கள் செய்வதற்கும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

110 மாவட்டங்களாக அதிகரிப்பு

முன்னதாக 78 மாவட்டக் கழகச் செயலாளர்கள் இருந்த நிலையில், கட்சியின் நிர்வாக வசதிக்காக மாவட்டங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திமுக தற்போது 110 மாவட்டங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், நகரப் பகுதிகளில் சுமார் 40 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு நகரச் செயலாளர் என்ற அடிப்படையிலும், ஒன்றியப் பகுதிகளில் 30 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றியச் செயலாளர் என்ற அடிப்படையிலும் கட்சி நிர்வாகத்தை மறுசீரமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மாவட்ட செயலாளர்கள் ஒருவர் 2 முறை மட்டுமே அந்த பதவியில் நீடிக்க முடியும் என்று அறிவித்த நிலையில் சில நிமிடங்களிலேயே மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் மாவட்ட செயலாளர்கள் ஒருவர் 3 முறை மட்டுமே அந்த பதவியில் நீடிக்க முடியும் என்று மாற்றப்பட்டுள்ளது.

வயது வரம்பில் புதிய மாற்றங்கள்?

கட்சிப் பதவிகளில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் வகையில் வயது வரம்புகள் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுது.

குறிப்பாக, மாவட்டச் செயலாளர் பதவிக்கு 70 வயதுக்கு மேற்பட்டவர்களை நியமிக்கக் கூடாது என்ற பரிந்துரை முன்வைக்கப்பட்டிருந்தது. தற்போது திமுகவில் 70 வயதைக் கடந்த மாவட்டச் செயலாளர்கள் 13 பேர் பதவியில் இருந்து நீக்கம்.

* காஞ்சிபுரம் தெற்கு – சுந்தர் – 72* ராணிப்பேட்டை – ஆர்.காந்தி – 80* திருவண்ணாமலை தெற்கு – எ.வ.வேலு – 75* விழுப்புரம் வடக்கு – செஞ்சி மஸ்தான் – 71* சேலம் கிழக்கு – எஸ்.ஆர்.சிவலிங்கம் – 75* ஈரோடு தெற்கு – முத்துசாமி – 77* தஞ்சாவூர் வடக்கு – சாக்கோட்டை அன்பழகன் – 72* புதுக்கோட்டை தெற்கு – ரகுபதி – 76* மதுரை மாநகர் – தளபதி – 70* தேனி தெற்கு – ராமகிருஷ்ணன் – 77* விருதுநகர் – கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் – 77* தூத்துக்குடி தெற்கு – அனிதா ராதாகிருஷ்ணன் – 74* திருநெல்வேலி மேற்கு – ஆவுடையப்பன் – 81

என 13 மாவட்டச் செயலாளர்கள் 70 வயதை கடந்தவர்களாக உள்ளதால் அவர்களுக்கு ஓய்வு அளிக்கும் விதமாகவும், புதிதாக வரும் செயலர்களுக்கு அறிவுரை வழங்கவும், மேற்பார்வை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இளைஞர்கள், பெண்களுக்கு அதிக வாய்ப்பு?

கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இளைஞர்களை முன்னிலைப்படுத்தும் வகையில் புதிய நிர்வாக அமைப்பு உருவாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், பெண்களுக்கும் கட்சிப் பொறுப்புகளில் கூடுதல் வாய்ப்புகளை வழங்குவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

புதியதாக அமைக்கப்படும் மாவட்டங்களில் ஆதி திராவிடர்களுக்கு 30 சதவீதமும், பெண்களுக்கு 10 சதவீதமும் பிரதிநிதித்துவம் வழங்குவது உள்ளிட்ட பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், கட்சிப் பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்குப் பதிலாக, தேர்தல் மூலம் நிர்வாகிகளைத் தேர்வு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் பகுதி செயலாளர்களுக்கும், பிற மாவட்டங்களில் ஒன்றியச் செயலாளர்களுக்கும் வயது வரம்பு நிர்ணயிப்பது குறித்தும் பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு முக்கியப் பொறுப்பு?

அதிமுகவில் இருந்து விலகி அண்மையில் திமுகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களுக்கு கட்சியில் கௌரவமான மற்றும் செல்வாக்குமிக்க பதவிகளை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்டச் செயலாளர்களின் கருத்துகளும் கேட்கப்பட்டுள்ளது.

செயற்குழுக் கூட்டத்தில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, கனிமொழி, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் என 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், திமுக மேற்கொண்டுள்ள இந்த உள்கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன. கட்சியின் அமைப்பை அடிமட்டத்தில் இருந்து வலுப்படுத்துவதுடன், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாற்றங்கள் அமையுமா என்பது திமுக தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.