📅 Saturday, 22 August 2026 IST | ஆவணி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 22, 2026 06:03 PM

ஆளுநர் கட்டுப்பாட்டில் கல்லூரிகள்; காலிப் பணியிடங்களை நிரப்புவதில் சிக்கல்

ஆளுநர் கட்டுப்பாட்டில் கல்லூரிகள்; காலிப் பணியிடங்களை நிரப்புவதில் சிக்கல்

ஆளுநர் கட்டுப்பாட்டில் கல்லூரிகள்; காலிப் பணியிடங்களை நிரப்புவதில் சிக்கல் - அமைச்சர் நிர்மல்குமார்

குஜிலியம்பாறை தாசில்தார், தனது சொந்த வெறுப்பின் காரணமாக மாவட்ட ஆட்சியருக்கே தெரியாமல் கம்யூனிஸ்ட்களின் தகவல்களை சேகரிக்கும் சுற்றறிக்கையை அனுப்பியதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

Published : August 22, 2026 at 3:55 PM IST

மதுரை: தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரி, பல்கலைக்கழகங்கள் ஆளுநரின் கட்டுப்பாட்டில் இயங்குவதால் காலிப் பணியிடங்களை நிரப்புவதில் சிக்கல் நிலவுவதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் புதிதாக கட்டப்பட்டுள்ள வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் இன்று (ஆகஸ்ட் 22) திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "குஜிலியம்பாறை தாசில்தார், தனது சொந்த வெறுப்பின் காரணமாக, மாவட்ட ஆட்சியருக்கே தெரியாமல் கம்யூனிஸ்ட் கட்சியினரின் தகவல்களை சேகரிக்கும் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளர்.

ஆறு மாதத்தில் ஓய்வு பெற உள்ள அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேல் நடவடிக்கைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது அரசாங்கத்தின் எண்ணம் அல்ல. ஒரு சிலர் இதை தவறாக அணுகியுள்ளனர்.

அதேபோல், அரசு கல்லூரி மாணவர்கள் போராடுவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவுக்கு அரசுக்கு உடன்பாடு இல்லை. இது தொடர்பாக உரிய ஆலோசனை நடத்தி முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் ஆளுநரின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. ஆகையால் நிர்வாக ரீதியாக பல சிக்கல்கள் இருக்கிறது.

வரும் ஜனவரி மாதத்திற்குள் எந்த பல்கலைக்கழகத்திலும் துணைவேந்தர்கள் இருக்க மாட்டார்கள். காலிப்பணியிடங்களை நிரப்ப முடியவில்லை. பட்டமளிப்பு விழா நடத்த முடியவில்லை. மாணவர்களுக்கு சான்றிதழ் கூட வழங்க முடியாத சூழல் உள்ளது.

கல்லூரிகளை மாநில பட்டியலுக்கு கொண்டு வந்தால் மட்டுமே, முழு கட்டுப்பாட்டுடன் செயல்படுத்த முடியும். இதற்காக பல ஆண்டுகளாக தமிழ்நாடு போராடி வருகிறது" என தெரிவித்தார்.