“2016
“2016-இல் இந்திய அணிக்குள் வந்திருந்தால் டெஸ்ட் ஆடி, ஒருநாள் போட்டியிலும்..” சூர்யகுமார் பேச்சு
மும்பை: டி20 கிரிக்கெட்டில் உலகின் அதிரடி பேட்ஸ்மேனாக வலம் வந்த இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தம்மால் சாதிக்க முடியாமல் போனது குறித்து மிகவும் வெளிப்படையாகப் பேசி தனது ஏமாற்றத்தைப் பகிர்ந்துள்ளார்.
ஆகாஷ் சோப்ராவின் யூடியூப் சேனலில் சூர்யகுமார் பேசுகையில், "டி20 கிரிக்கெட் போன்றே ஒருநாள் கிரிக்கெட்டும் வெள்ளை பந்து ஆட்டம்தான். ஆனால், இந்த வடிவத்தில் சாதிப்பதற்கு நான் போதிய உழைப்பைத் தரவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஒருவேளை நான் 2016-ல் இந்திய அணிக்குள் வந்திருந்தால் டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி, ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கலாம் என்று கற்பனையாக என்ன வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் யதார்த்தம் அதுவல்ல. இதற்காக யாரையும் நான் குறை சொல்ல விரும்பவில்லை. நானே முழுப் பொறுப்பையும் ஏற்கிறேன். கண் இமைக்கும் நேரத்திற்குள் 20 முதல் 25 ஒருநாள் போட்டிகளில் ஆடிவிட்டேன்" என்றார்.
மேலும் ஒருநாள் கிரிக்கெட் ஏன் கடினமானது என்பதை விளக்கிய அவர், "பேட்ஸ்மேன்களுக்கு ஒருநாள் கிரிக்கெட் தான் மிகவும் சவாலான வடிவமாகும். நீங்கள் 4வது வரிசையில் களம் இறங்கும்போது 0 ரன்களுக்கு 2 விக்கெட் வீழ்ந்திருக்கலாம் அல்லது 6வது வரிசையில் களம் இறங்கும்போது 24 ரன்களுக்கு 4 விக்கெட் வீழ்ந்திருக்கலாம். இதனால், தொடக்கத்தில் டெஸ்ட் போட்டியைப் போல நிதானமாக விளையாடி, பின்னர் டி20 போட்டியைப் போல அதிரடியை அதிகரிக்க வேண்டும்" என்றார்.
"நான் டி20 போட்டியில் ஒரு மணி நேரம் பேட்டிங் செய்ய விரும்பினால், அதற்காக ஒன்றரை மணி நேரம் கூடுதல் பயிற்சி செய்கிறேன். ஆனால் ஒருநாள் போட்டிகளுக்கு அந்த கூடுதல் பயிற்சியை நான் செய்யவில்லை" என்றும் சூர்யகுமார் கூறினார்.
சூர்யகுமார் யாதவ் இதுவரை 37 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 25.76 சராசரியுடன் 773 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். கடந்த 2023 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்குப் பிறகு அவர் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படாதது தமக்கு பெரும் ஏமாற்றம் அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.