📅 Sunday, 30 August 2026 IST | ஆவணி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 30, 2026 10:04 AM

ரூ.206 கோடி சர்வதேச விளையாட்டு நகரம் திட்டத்தை கைவிடுகிறதா த.வெ.க., அரசு? கட்டுமான ஒப்பந்தம் திடீர் ரத்து

ரூ.206 கோடி சர்வதேச விளையாட்டு நகரம் திட்டத்தை கைவிடுகிறதா த.வெ.க., அரசு? கட்டுமான ஒப்பந்தம் திடீர் ரத்து

சென்னை: சென்னை, செம்மஞ்சேரியில், 205.89 கோடி ரூபாயிலான, சர்வதேச விளையாட்டு நகர திட்டத்திற்கான கட்டுமான ஒப்பந்தத்தை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ரத்து செய்துள்ளது. இதனால், இத்திட்டத்தை த.வெ.க., அரசு கைவிடுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

விளையாட்டுத் துறையில் தமிழகத்தை சிறந்த மாநிலமாக உருவாக்கும் நோக்கத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 261 கோடி ரூபாயில், சென்னை செம்மஞ்சேரியில், சர்வதேச தரத்தில், 'மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி' அமைக்கப்படும் என, முந்தைய தி.மு.க., அரசு அறிவித்தது.

ஒலிம்பிக் பவன் இதற்கான கட்டுமான டெண்டர், கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்டது. பிப்ரவரி 18ம் தேதி, அன்றைய முதல்வர் ஸ்டாலின், இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். அதைத் தொடர்ந்து, 205.89 கோடி ரூபாயில் பணிகளை மேற்கொள்ள, தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

கடந்த மே 10ம் தேதி, முதல்வர் விஜய் தலைமையில், த.வெ.க., அரசு பதவியேற்றது.

சர்வதேச விளையாட்டு நகரத்திற்கான கட்டுமான ஒப்பந்தத்தை, கடந்த 12ம் தேதி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ரத்து செய்துள்ளது. இதனால், இத்திட்டத்தையே தமிழக அரசு கைவிடுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, சென்னை நேரு விளையாட்டு அரங்கை, ஒலிம்பிக் பவனாக மாற்றும் திட்டத்தை அறிவித்துள்ளார். இதனால், செம்மஞ்சேரியில் சர்வதேச விளையாட்டு நகரம் தேவையில்லை என்ற முடிவுக்கு, அரசு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக, விளையாட்டு ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:

செம்மஞ்சேரியில் விளையாட்டு நகரம் அமையவுள்ள இடம், மழைக் காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதி. அந்த நிலம் மழை நீர் வெளியேறும் பகுதியாக உள்ளது.

மழைநீர் அதிக அளவில் தேங்கும் இடத்தில் விளையாட்டு நகரம் அமைப்பது பொருத்தமாக இருக்காது.

சர்வதேச போட்டிகள் எனவே, ஏற்கனவே திட்டமிடப்பட்டதை விட, மிகப்பெரிய விளையாட்டு நகரமாக உருவாக்கவும், கிடைக்கும் நிலத்தை முழுமையாக பயன்படுத்தவும், ஆசிய விளையாட்டு போட்டிகள் போன்ற சர்வதேச போட்டிகளை நடத்தும் வகையில் திட்டத்தை மறுவடிவமைக்க, அரசு முடிவு செய்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

விளையாட்டுத் துறையில் அறிவிக்கப்பட்ட முக்கியமான, பெரிய திட்டமான, சர்வதேச விளையாட்டு நகர கட்டுமான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்து அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

'திட்டத்தை அறிவித்து, 205.89 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப் பட்ட பின், ரத்து செய்வது சரியான அணுகு முறை அல்ல. தமிழக அரசு இதற்கான காரணத்தை தெளிவுப்படுத்த வேண்டும்' என, விளையாட்டு ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.