மரத்தில் கட்டிப்போட்டு தீ வைத்த பிறகு 2 மாதம் சிகிச்சையில் போராடிய பஞ்சாப் இன்ஃப்ளூயன்சர் உயிரிழப்பு
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இன்ஃப்ளூயன்சர் (சமூக ஊடக பிரபலம்) மன்ஜீத் கவுர் (28). யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் இவரை லட்சக்கணக்கானோர் பின்தொடர்கின்றனர்.
கடந்த ஜூலை 3-ம் தேதி இவரை மர்ம நபர்கள் காரில் கடத்திச் சென்றனர். செல்லும் வழியில் அவரை சரமாரியாக தாக்கிய அந்த நபர்கள், பஞ்சாப்பின் ரூப்நகர் மாவட்டத்தில் உள்ள மொரிண்டாவில் காரை நிறுத்தினர்.
பின்னர் அவர்கள் மன்ஜீத் கவுரை அங்குள்ள ஒரு மரத்தில் கட்டிப்போட்டு, அவரது உடலில் தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றனர். தகவல் அறிந்து வந்த அவரது நண்பர் மருத்துவமனையில் சேர்த்தார்.
முதலில் மொரிண்டாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவரது தீக்காயங்களின் தீவிரத்தன்மை காரணமாக, ஜூலை 9-ம் தேதி சண்டிகரில் உள்ள பிஜிஐஎம்இஆர் மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், 2 மாதங்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தபோதிலும் மன்ஜீத் கவுர் கடந்த புதன்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தாயார் அளித்த புகாரின் பேரில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.