சுவா சூ காங் தீ: இருவர் பாதிப்பு, 200 பேர் வெளியேற்றம்
சுவா சூ காங்கில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு ஒன்றில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) இரவு தீ மூண்டதை அடுத்து, இருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அக்குடியிருப்புக் கட்டடத்திலிருந்து கிட்டத்தட்ட 200 பேர் வெளியேற்றப்பட்டனர்.
சுவா சூ காங் அவென்யூ 2ல் உள்ள புளோக் 287ல் தீ விபத்து ஏற்பட்டதாக சம்பவம் நடந்த நாளன்று இரவு 9.05 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 30) தெரிவித்தது.
அந்தப் புளோக்கின் இரண்டாவது தளத்தில் இருக்கும் பாதிக்கப்பட்ட படுக்கை அறையில் இருந்த பொருள்கள் தீப்பற்றின.
சம்பவ இடத்திற்கு விரைந்த குடிமைத் தற்காப்புப் படையினர், நீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். அவர்கள் வருவதற்கு முன்பாகவே, பாதிக்கப்பட்ட வீட்டிலிருந்து இருவர் வெளியேற்றப்பட்டனர்.
புகைமூட்டத்தால் இருவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்கு அவர்களைக் கொண்டு சென்றதாகக் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
தீவிபத்தால் பாதிக்கப்பட்ட வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட இருவர்தான் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்களா என்ற விவரம் தெளிவாகத் தெரியவில்லை.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
ஆகஸ்ட் மாதத்தில் வீடமைப்பு வளர்ச்சி கழக வீடுகளில் அடுத்தடுத்துப் பல தீ விபத்துகள் நடந்தன. அவற்றில் சில உயிரிழப்பையும் ஏற்படுத்தின.