📅 Tuesday, 18 August 2026 IST | ஆவணி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports May 28, 2026 12:32 AM

சித்தர்களின் விளையாட்டு

சித்தர்களின் விளையாட்டு

பிரம்மமுனி சித்தர்“மகேஸ்வரரே! மக்களுக்குச் சேவை செய்யவே சித்தர்கள் தங்களின் வாழ்வை அர்ப்பணித்திருக்கிறார்கள். வாதம், வைத்தியம், யோகம், ஞானத்தில் ஈடுபட்டு மக்கள் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ சித்தர்கள் கற்றுக் கொடுப்பதெல்லாம் தங்களின் அருட்கொடையே. தங்களை பணிந்து வணங்குகிறேன்” என்றார் நாரதர். மகேஸ்வரி புன்னகைத்தபடி, “நாரதரே! சித்தர்கள் தங்களுக்குள் யார் பெரியவர் என சண்டையிட்டனர். அது ஏன் எனத் தெரியுமா?” எனக் கேட்க, “தாயே! நானும் பல நாளாகத் தங்களிடம் கேட்க வேண்டும் என நினைத்தேன். முற்றிலும் துறந்து, மக்களின் நலனுக்காக தங்களை அர்ப்பணித்த சித்தர்கள் ஏன் குழந்தைகளைப் போல தங்களுக்குள் சண்டையிட்டார்கள்? நீங்களே இதை விளக்கினால் அது எங்களின் பாக்கியம்” என்றார். “சித்தர்கள் சிவபெருமானின் அருளால் ஞானம் பெறுகிறார்கள். பின்னர் குறிப்பிட்ட துறையில் அறிவு, ஆற்றலை வளர்த்துக் கொள்கிறார்கள். மேலும் ஞானம் பெறக் குருநாதரைத் தேடுகிறார்கள். தங்களின் குருநாதர் எதில் சிறந்தவர் என்பதை அறிந்து அதைக் கற்றுக் கொள்கிறார்கள். அகத்தியரிடம் அனைத்துக் கலைகளும், போகரிடம் ரசவாதம், திருமூலரிடம் யோகம், காலங்கிநாதரிடம் ஞானம் என அவர்களைத் தங்கள் குருவாக ஏற்று, ஞானம் பெற்றார்கள். அதற்காகவே சித்தர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டனர். இதன் மூலம் அவர்களின் திறமை வெளிப்பட்டது. இப்போது புரிகிறதா நாரதரே!” என மகேஸ்வரி சொல்ல நாரதரும் அதை ஆமோதித்து இருவரையும் வணங்கினார். வட இந்தியாவில் ஒரு கிராமத்தில் வயதான தம்பதிக்கு நீண்ட நாளாக குழந்தை இல்லை. தங்களுடைய வேண்டுதலுக்கு எந்தப் பலனும் இல்லாததால் மனம் வருந்திய அவர்கள் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரையும் வேண்டி உண்ணாமல் உறங்காமல் தவமிருந்தனர். வேண்டுதலை நிறைவேற்ற அவர்கள் முன் தோன்றி, குழந்தைப்பேற்றை வரமாக அளித்தனர். அப்போது அந்த தம்பதி மூவரையும் நோக்கி, “முப்பெரும் கடவுளரே, எங்களின் இளமைக் காலத்திலிருந்தே குழந்தைப் பேறுக்காகக் காத்திருந்தோம். நீண்ட நாளுக்குப் பிறகு தாங்கள் வரமளித்ததைக் கண்டு மகிழ்ச்சி கொள்கிறோம். எங்களுக்குப் பிறக்கும் குழந்தை இந்த உலகமே மெச்சும்படி உங்களைப் போன்ற தெய்வீக ஆற்றலுடன் இருக்க வேண்டும். மூன்று கலைகளிலும், வித்தகராகத் திகழ வேண்டும்” என வேண்டினர்.அதன்படி அழகிய ஆண் குழந்தை பெற்றனர். நல்ல பேச்சுத் திறன், ஒளி வீசும் கண்களுடன் காணப்பட்ட குழந்தை தன் தெய்வீக ஆற்றலால் பல சித்து வேலைகளைச் செய்ய ஆரம்பித்தது. சிவன் அருளால் ஞானக்குழந்தை கிடைத்ததால் ஞானேஸ்வரர் எனப் பெயரிட்டு அந்தக் குழந்தையை அழைத்தனர். அந்த ஊர் மக்கள் தங்களின் குறைகளை குழந்தையிடம் கூற, ஞானேஸ்வரரோ அவர்களுக்கு ஆசி வழங்கி, குறைகளை நிறைவேற்றியதால் பெரும் புகழ் பெற்றார். ஊரார் அனைவரும் ஞானேஸ்வரரை குழந்தை எனக் கருதாமல் பிரம்மனாக, பெருமாளாக, ஈஸ்வரனாக வணங்கினர். ஒருமுறை வாரணாசி சென்ற கோரக்கர் சிறுவனாகிய ஞானேஸ்வரரின் ஆற்றலை அறிந்து, அவரைச் சந்திக்க விரும்பினார். சிறுவர்களுக்குப் புலியைப் பார்த்தால் பயம் உண்டாகும். ஆனால் விஞ்ஞானம், மெய்ஞானத்தை கண்களாக கொண்டவர்கள் சித்தர்கள். இவர்கள் புலி என்பது ஒரு மாயை என அறிவார்கள். ஆகவே சிறுவனாகிய ஞானேஸ்வரரின் ஞானத்தைச் சோதனை செய்ய விரும்பிய கோரக்கர் ஒரு புலியின் மேல் ஏறி சந்திக்கச் சென்றார். சக வயது சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த ஞானேஸ்வரர் புலி மீது கோரக்கர் வருவதைப் பார்த்து புரிந்து கொண்டார். தன் நண்பர்கள் புலியைப் பார்த்து பயந்து விடக் கூடாது என்பதற்காக அவர்களை அணைத்தவாறே விண்ணில் பறந்து சென்று, கோரக்கர் முன் நின்றார். தான் சந்திக்கச் சென்ற ஞானேஸ்வரர் விண்ணில் பறந்து வந்து தன் முன் வித்தை காட்டுவதைக் கண்ட கோரக்கர் கோபம் கொண்டு, ஞானேஸ்வரரின் சித்து வேலையை முறிக்கும் பிரம்மாஸ்திரத்தை எறிந்தார். ஞானேஸ்வரர் பிரம்மாஸ்திரத்தைப் பூக்களாக மாற்றினார். அந்தப் பூக்கள் பூ மாலையாகத் திரும்பி கோரக்கரின் கழுத்தில் விழுந்தது. மீண்டும் கோபம் கொண்ட கோரக்கர் பதிலுக்கு நாக அஸ்திரத்தை எறிந்தார். ஞானேஸ்வரர் சிரித்தவாறே அதனைப் பிடித்து கோரக்கருக்கே திருப்பி அனுப்ப, நாகஅஸ்திரம் கோரக்கரின் கழுத்தில் விழுந்து, படமெடுத்து நின்றது. கோரக்கர் தான் சந்திக்க வந்த ஞானேஸ்வரரின் தெய்வீக ஆற்றலைப் புரிந்து கொண்டார். தான் தவவலிமையால் பெற்ற ஆற்றலை விட முப்பெரும் தேவரின் அருளைப் பிறப்பிலேயே பெற்ற ஞானேஸ்வரர் தன்னை விடச் சிறந்தவர் என அறிந்து கோரக்கர் வணங்கி நின்றார். ஞானேஸ்வரரோ, “நான் சிறுவன். தாங்கள் என்னை விட வயதிலும், அனுபவத்திலும் மூத்தவர். தாங்களே என்னுடைய குருநாதர்” என கோரக்கரை வணங்கினார். இருவரும் சிறந்த நண்பர்களாக மாறினர். கோரக்கரின் ஆற்றலைக் கண்டு வியந்த ஞானேஸ்வரர் தவம் செய்யும் முறைகளை அவரிடம் கற்றுக் கொண்டார். ஒருமுறை இருவரும் கடுமையாகத் தவமிருந்த போது கோரக்கர் மூலிகையும், பிரம்மபத்ரம் என்ற புகையிலையும் தோன்றியது. அந்த பிரம்ம பத்ரத்தின் குணங்களை விளக்கியதால் அனைத்து சித்தர்களாலும் 'பிரம்மமுனி' என ஞானேஸ்வரர் அழைக்கப்பட்டார். கோரக்கரின் விருப்பப்படி சதுரகிரிக்குச் சென்றார் பிரம்மமுனி. அங்கு ஞானம் 100, சூத்திரம் 200, வைத்தியம் 700, தண்டகம் 100, வகார சூத்திரம் 68, அண்ட வித்தை 42, முப்பு தீட்சை 45, கருக்கடை 380, முப்புவழலை போன்ற சித்த மருத்துவ நுால்களை எழுதினார். இலங்கையை ஆண்ட மன்னர்கள் பிரம்மமுனி பற்றி அறிந்து தங்கள் நாட்டுக்கு வருகை தர வேண்டும் என வேண்டினர். இலங்கை வைத்தியர்கள் பிரம்மமுனியை தங்களின் குருவாக ஏற்று மருத்துவ முறைகளைக் கற்றுக் கொண்டு மன்னருக்கு வைத்தியம் செய்தனர். இதனால் 'ராஜ வைத்தியர்' என பிரம்மமுனியின் சீடர்கள் அழைக்கப்பட்டனர். பின்னர் கோரக்கரின் ஆசியுடன் அங்கே திரிகோணமலையில் தவமிருந்து முக்தியடைந்தார். மகேஸ்வரரை வணங்கிய நாரதர், “தன்னலமின்றி நாடு, மதம், இனம் வேறுபாடு பார்க்காமல் சித்தர்கள் மக்களின் ஆரோக்கியத்தைக் காப்பதற்காகப் பல்வேறு ரகசியங்களை கற்றுக் கொடுத்துள்ளனர். இமயமலையில் இன்றும் யோக நிலையில் இருக்கும் சித்தர்கள் பற்றித் தாங்கள் கூற வேண்டும். அதை அறிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார். -விளையாட்டு தொடரும்ஜெ.ஜெயவெங்கடேஷ்90030 00250