ஜார்க்கண்டில் மாணவர்கள் போராட்டம் எதிரொலி: அரசுப் பணியாளர் தேர்வு ரத்து
ராஞ்சி: மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து அரசுப் பணிக்காக நடத்தப்பட்ட தேர்வுகளை ரத்து செய்வதாக ஜார்க்கண்ட் அரசு அறிவித்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய மூன்று தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இதைக் கண்டித்தும், மூன்று போட்டித் தேர்வுகளை ரத்து செய்யக் கோரியும், மாணவர்கள், இளைஞர்கள் இணைந்து, 20 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தினர்.
அதுமட்டுமின்றி ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை, காங்., வாபஸ் பெற வேண்டும் என, அக்கட்சியின் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரான ராகுலுக்கு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் அமைப்பினர் வலியுறுத்தி இருந்தனர்.
இந்நிலையில் அரசுப் பணிக்காக நடத்தப்பட்ட தேர்வுகளை ரத்து செய்வதாக ஜார்க்கண்ட் அரசு அறிவித்துள்ளது. 2014ம் ஆண்டு முதல் தற்போது வரை நடத்தப்பட்ட அனைத்துத் தேர்வுகள் குறித்து விசாரணை நடத்தப்படும்; அது சிறியது, பெரியது என எதுவாக இருந்தாலும் விசாரணை நடைபெறும்.
தேர்வு சீர்திருத்தங்கள் சார்ந்து வெளிப்படைத்தன்மை உடன் அரசு செயல்படும் என அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்தார். இந்த முடிவு அம்மாநில அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும் வரை போராட்டம் தொடரும் என மாணவர்கள் அறிவித்துள்ளனர்.