📅 Saturday, 05 September 2026 IST | ஆவணி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 05, 2026 07:03 AM

63 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்காமல்...தாமதம்!: 50 ஆயிரம் டன் நெல், மழையில் நாசமாவதால் கவலை

63 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்காமல்...தாமதம்!: 50 ஆயிரம் டன் நெல், மழையில் நாசமாவதால் கவலை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் சொர்ணவாரி பட்டத்தில் சாகுபடி செய்து அறுவடை செய்த நெல்லை, விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இதுவரை திறக்கப்படாததால், அறுவடை செய்த 50 ஆயிரம் டன் நெல்லை கிராமங்களில் குவித்து வைத்து பாதுகாக்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் காவாந்தண்டலம், மேல்பெரமநல்லுார், மாகரல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சொர்ணவாரி பட்டத்தில் நெல் சாகுபடி செய்யப் பட்டுள்ளது.

தற்போது அறுவடை பணிகள் முடிந்துள்ள நிலையில், பல டன் நெல்லை விவசாயிகள் மூட்டைகளாகவும், குவியல்களாகவும் வயல்வெளி மற்றும் வீடுகளின் அருகே சேமித்து வைத்துள்ளனர்.

மேல்பெரமநல்லுார் கிராமத்தில் மட்டுமே, 20 ஆயிரம் மூட்டைகள் விற்பனை செய்யும் அளவுக்கு நெல் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், பல இடங்களில் இதுவரை திறக்கப்படவில்லை என, விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

பிரச்னை பொதுவாக, சொர்ணவாரி பருவ அறுவடை தொடங்கும் ஆகஸ்ட் மாதத்திலேயே கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும்.

ஆனால், செப்டம்பர் மாதம் தொடங்கியும் நிலையங்கள் திறக்கப்படாததால், அறுவடை செய்த நெல்லை எங்கு விற்பனை செய்வது என தெரியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், சொர்ணவாரி பட்டத்தில் சராசரியாக 50 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்படும். இதற்கான பணிகள் இதுவரை தொடங்காததால், விவசாயிகளுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன.

விவசாயிகள் விளைவிக்கும் நெல் குண்டு ரகமாக இருந்தால், குவிண்டாலுக்கு 2,600- ரூபாயும், சன்ன ரகமாக இருந்தால் 2,750 ரூபாயு-ம் வழங்கப்படுகிறது. மாவட்டம் முழுதும் 63 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க, இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், நிலையங்கள் திறப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது.

கோரிக்கை சில நாட்களாக பெய்த மழையால், திறந்தவெளியில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல் நனைந்து வருகிறது. சில இடங்களில் நெல் முளைக்க தொடங்கியுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நெல் சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அறுவடை செய்த நெல்லை நீண்ட நாட்கள் வீட்டிலோ, வயல்வெளியிலோ பாதுகாத்து வைக்க முடியாது. மழை பெய்யும்போது நெல் நனைந்து தரம் குறைவதுடன், முளைவிட்டால் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்படும்.

இதனால், சாகுபடிக்காக செலவிட்ட தொகையைக்கூட திரும்ப பெற முடியாத சூழல் ஏற்படும் என, விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 63 இடங்களிலும் கொள்முதல் நிலையங்களை உடனே திறந்து, அறுவடை செய்யப்பட்ட நெல்லை தாமதமின்றி கொள்முதல் செய்ய வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: மேல்பெரமநல்லுார் உள்ளிட்ட கிராமங்களில் நெல் கொள்முதல் செய்ய தேவையான இயந்திரம் உள்ளிட்ட பொருட்களும் சென்றுவிட்டன. ஒரு சில நாட்களில் கொள்முதல் செய்ய துவங்கிவிடுவோம். விவசாயிகளிடம் நாங்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளோம். விரைவாக கொள்முதல் செய்து விடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.