📅 Thursday, 04 June 2026 IST | வைகாசி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health May 27, 2026 08:32 PM

ஆண்டிபயாடிக் மாத்திரைகளை சரியாக எடுக்காவிட்டால் நம் உடம்புக்கு என்னவாகும்?

ஆண்டிபயாடிக் மாத்திரைகளை சரியாக எடுக்காவிட்டால் நம் உடம்புக்கு என்னவாகும்?

ஆண்டிபயாடிக் மாத்திரைகளை சரியாக எடுக்காவிட்டால் நம் உடம்புக்கு என்னவாகும்? - எச்சரிக்கும் நிபுணர்கள்

ஆண்டிபயாடிக் மாத்திரைகளை பொறுத்தவரையில் மருத்துவர்கள் எத்தனை நாட்கள் கொடுத்தாலும், அத்தனை நாட்கள் சாப்பிட வேண்டும் என்று தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குநர் சோமசுந்தரம் அறிவுறுத்தி உள்ளார்.

Published : January 1, 2026 at 5:58 PM IST

-BY எஸ்.ரவிச்சந்திரன்

சென்னை: ஆண்டிபயாடிக் மாத்திரைகளை சரியாக எடுக்காவிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் என தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குநர் சோமசுந்தரம் எச்சரித்துள்ளார்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) 2013 முதல் நுண்ணுயிர் எதிர்ப்பு ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு பணிகளை (AMRSN) மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக 2024 ஜனவரி முதல் டிசம்பர் வரையில் நோய் கிருமிகளின் செயல்பாடுகள் குறித்த முக்கிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தியா முழுவதும் உள்ள 6 முக்கிய நோய்க்கிருமி குழுக்களில் நுண்ணுயிர் எதிர்ப்பு (AMR) பற்றிய தரவை முறையாகச் சேகரித்து, பகுப்பாய்வு செய்து, அறிக்கையை வெளியிட்டுள்ளது. மேலும் இதன் ஆய்வை சமூக அளவில் நடத்த வேண்டியதன் அவசியத்தையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது.

இந்த நிலையில், கடந்த டிசம்பர் 28ஆம் தேதி ’மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “இந்திய மருத்துவ ஆய்வுக் குழு தற்போது அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. அதில் நிமோனியா மற்றும் UTI அதாவது சிறுநீரகத் தொற்று போன்ற நோய்களுக்கு எதிராக ஆண்டிபயாட்டிக் மருந்துகள், அதாவது நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பலம் குன்றியவையாக இருக்கிறது என்று இதில் கூறப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, இதற்கான மிகப்பெரிய காரணம் என்றால், மக்கள் சற்றும் சிந்திக்காமல் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக் கொள்வது தானாம். இவற்றை மருத்துவரின் ஆலோசனைபடி மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு மாத்திரை போட்டுக் கொள்வோம், அனைத்து கஷ்டங்களிலிருந்தும் விடுதலை அடைவோம் என்று இப்போதெல்லாம் மக்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாகவே நோய்களும், நோய்த் தொற்றுக்களும் இந்த நுண்ணுயிர் எதிர்ப்பி (antibiotics) மருந்துகளை பயனற்றுப் போகச் செய்கின்றன.

தயவு செய்து உங்கள் இஷ்டப்படி மருந்துகளைப் பயன்படுத்தாதீர்கள் என்று உங்கள் அனைவரிடத்திலும் கேட்டுக் கொள்கிறேன். நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்துகள் விஷயத்தில் இதை நினைவில் வைத்திருப்பது மிகவும் அவசியம். மருந்துகளை எடுத்துக்கொள்ள வழிகாட்டுதலும், நுண்ணுயிர் எதிர்ப்பிகளை எடுத்துக் கொள்வதற்கு மருத்துவர்களின் பரிந்துரையும் அவசியம் என்றே நான் கூறுவேன். இந்தப் பழக்கம் உடல்நலத்தை மேலும் சிறப்பாக்க உதவுவதாக இருக்கும்" என்று மோடி தமது உரையில் பேசியிருந்தார்.

இதுகுறித்து தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குநர் சோமசுந்தரம் ஈடிவி பாரத்திற்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர், "ஆண்டிபயாடிக் என்பது பாக்டீரியா கிருமிகளை கொல்லக்கூடியது. வைரஸுக்கு ஆண்டி வைரல் என உள்ளது. மருத்துவர்கள் மாத்திரைகளை பரிந்துரைக்கும்போது 5,7,14 நாட்கள் வரையில் பரிந்துரைப்பது வழக்கம். அப்படி பரிந்துரைக்கும்போது முழு கால அளவிலும் நாம் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.

மருத்துவமனைகளிலும் நோய் கிருமிகள் தாக்கும் வாய்ப்புகள் இருக்கும். இதனால் தான் மருத்துவமனைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். ஆரம்ப சுகதார நிலையங்களில் மருத்துவர்களுக்கு நிலையான வழிகாட்டுமுறைகளை பின்பற்றி ஆன்டிபயாடிக் மாத்திரைகளை தர வேண்டும் என பயிற்சியும் அளிக்கிறோம். சிலருக்கு மாத்திரைகள் ஒவ்வாமை இருந்தால் அதனை தரக்கூடாது.

மாத்திரை சாப்பிடும் போது அலர்ஜி வந்தால் வேறு மாத்திரையை சாப்பிட வேண்டும். ஆண்டிபயாடிக் மாத்திரைகளை பொருத்தவரையில் மருத்துவர்கள் எத்தனை நாட்கள் கொடுத்தாலும், அத்தனை நாட்கள் சாப்பிட வேண்டும். எனவே மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சரியான மாத்திரைகளை முழுவதும் சாப்பிட வேண்டும். ஆன்டிபயாடிக் மாத்திரைகளில் உள்ள சிவப்பு குறியீட்டை பார்த்து சாப்பிட வேண்டும்" என்று தெரிவித்தார்.

மாநில பொது சுகாதாரத் துறை ஆய்வகத்தின் துணை இயக்குநர் (நுண்ணுயிரியல்) எஸ்.ராஜூ கூறும்போது, "நுண் கிருமிகளுக்கு எதிராக உடலில் உருவாகும் எதிர்ப்பு சக்தியை ஆண்டிமைக்ரோபியல் என கூறுவோம். மனிதனை தாக்கும் கிருமிகள் பாக்டீரியா, வைரஸ், ஒட்டுண்ணிகள், பூஞ்சைகள் ஆகும். பாக்டீரியல் நோய்கள் நிறைய உள்ளது. அதனை தடுப்படுதற்கு அளிக்கப்படும் மருந்து தான் ஆன்டிபயாடிக்ஸ். ஆன்டிபயோடிக்ஸ் தவறுதாலாகவோ, மருந்தகங்களில் தானக வாங்கி சாப்பிடும் போது, பாக்டீரியா கிருமிகள் உடலில் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்.

அதனைத் தான் ஆண்டிமைக்ரோபியல் எதிர்ப்பு என கூறுவோம். ஆண்டிபயாடிக் மருந்துகளை கண்டுபிடிக்க 10 ஆண்டுகள் கூட ஆகலாம். மக்கள் ஆண்டிபயாடிக் மருந்துகளை தவறுதலாக பயன்படுத்தும் போது பாக்டீரியாக்கள் மருந்திற்கு எதிராக சக்தியை உருவாக்கி கொள்ளும். மருந்திற்கு எதிரான சக்தி பாக்டீரியாவிடம் உருவாக்கினால் மருந்து வேலை செய்யாது. இதனால் மனிதர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் இறுதி நிலைக்கு தள்ளப்படுவோம். கோவிட் பெருந்தொற்றை உலக சுகாதார நிறுவனம் அறிவித்தனர். அதேபோல் தான் நமக்கே தெரியாமல் பெருந்தொற்று 2050 ஆண்டில் சைலன்ட் பெருந்தாெற்று உலகையே அச்சுறுத்தும் என எச்சரித்துள்ளனர்" என்றார்.