ஆர்டிஎஸ் ரயில் சேவைக் கட்டணம் ஜனவரியில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
இஸ்கந்தர் புத்ரி: ஜோகூர் பாரு - சிங்கப்பூர் இடையிலான ரயில் இணைப்புச் சேவைத் தொடங்கப்படுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னதாக, அதாவது ஜனவரி மாதம் அதன் அதிகாரத்துவக் கட்டணங்களை மலேசியப் போக்குவரத்து அமைச்சு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து ஜோகூர் மாநிலப் பொதுப்பணி, போக்குவரத்து, உள்கட்டமைப்பு,தொடர்புத் துறைக் குழுத் தலைவர் முகம்மது ஃபஸ்லி முகம்மது சாலே தகவல் தெரிவித்தார்.
கட்டண விவகாரம் தொடர்பாக ‘ஆர்டிஎஸ் ஆபரேஷன்ஸ்’ நிறுவனத்துக்கும் மலேசியா மற்றும் சிங்கப்பூர் அரசாங்கங்களுக்கும் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
“2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான ஊடகச் செய்திகளில், ஒரு வழிப் பயணத்திற்கான உத்தேசக் கட்டணம் $5 முதல் $7 வரை அல்லது 15.50 ரிங்கிட் முதல் 21.70 ரிங்கிட் வரை இருக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
“எனினும், 2027ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆர்டிஎஸ் ரயில் சேவைத் தொடங்கப்படுவதற்கு முன்னதாக, 2027ஆம் ஆண்டு ஜனவரியில் போக்குவரத்து அமைச்சு அதிகாரத்துவக் கட்டணங்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தற்போதைய நிலையில் ஒரு வழி, இருவழிப் பயணக் கட்டணங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை,” என்று திரு முகம்மது ஃபஸ்லி கூறினார்.
புதன்கிழமை (நவம்பர் 25) நடைபெற்ற ஜோகூர் மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தின்போது, ஆர்டிஎஸ் இணைப்புக் கட்டணங்கள் குறித்து பெர்மாஸ் சட்டமன்ற உறுப்பினர் பஹாருதீன் முகம்மது தாயிப் எழுப்பிய துணைக் கேள்விக்குப் பதிலளிக்கையில் திரு முகம்மது ஃபஸ்லி இவ்வாறு தெரிவித்தார்.