📅 Wednesday, 25 November 2026 IST | கார்த்திகை 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil November 25, 2026 05:01 PM

2026 குர்பான் சடங்கு இடையூறுகள்: 32 பேருக்குப் பணம் திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது

2026 குர்பான் சடங்கு இடையூறுகள்: 32 பேருக்குப் பணம் திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது

இவ்வாண்டு தங்களது குர்பான் சடங்குகளில் ஏற்பட்ட இடையூறுகளால் பாதிக்கப்பட்ட 32 பேருக்கு புதன்கிழமை (நவம்பர் 25) நிலவரப்படி பணம் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளதாகச் சிங்கப்பூர் இஸ்லாமியச் சமய மன்றமும் (முயிஸ்) சிங்கப்பூர்ப் பயனீட்டாளர் சங்கமும் தெரிவித்துள்ளன.

குர்பான் சடங்கை நிறைவேற்ற விரும்பியவர்களில் பாதிக்கப்பட்ட 123 பேரில் அவர்களும் அடங்குவர். அவர்களின் வழக்கு கடந்த அக்டோபர் மாதம் சிங்கப்பூர்ப் பயனீட்டாளர் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இவ்வாண்டு ஹஜ்ஜுப் பெருநாளுக்காக ‘த மீட் பிரதர்ஸ்’ (The Meat Brothers) நிறுவனம் செய்திருந்த உள்ளூர் குர்பான் ஏற்பாடுகளில் இடையூறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் புதன்கிழமை முயிசும் சங்கமும் வெளியிட்ட கூட்டுச் செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

செம்மறி ஆடுகள், ஆட்டுக்குட்டிகள் போன்ற பண்ணை விலங்குகளைப் பலியிட்டு, பின்னர் அவற்றின் இறைச்சியை வழிபாட்டாளர்களுக்கும் தேவைப்படுவோருக்கும் பகிர்ந்தளிக்கும் இஸ்லாமியச் சடங்கான குர்பான், ஹஜ்ஜுப் பெருநாளன்றோ அதற்கு அடுத்த மூன்று நாள்களிலோ நிறைவேற்றப்படுகிறது.

இவ்வாண்டில் ஹஜ்ஜுப் பெருநாள் மே 27ஆம் தேதி கொண்டாடப்பட்டது.

ஆஸ்திரேலிய அதிகாரிகளிடமிருந்து தேவையான ஏற்றுமதி அனுமதியை இன்னும் பெறாததால், வருடாந்தரக் குர்பான் சடங்கிற்காக ஆஸ்திரேலியாவிலிருந்து கால்நடைகளை உரிய நேரத்தில் இறக்குமதி செய்ய முடியாது என்று ‘த மீட் பிரதர்ஸ்’ நிறுவனம் தன்னிடம் தெரிவித்ததாக முயிஸ் மே 21ஆம் தேதி கூறியது.

ஆகஸ்ட் மாத இறுதிக்குள் பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் பணிகளை முடிக்கத் திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் முன்னதாகத் தெரிவித்திருந்தது. ஆனால், மூன்றாம் தரப்பினரிடமிருந்து வரவேண்டிய பணத்திற்காகக் காத்திருப்பதால் அதில் தாமதம் ஏற்படும் என்று ஆகஸ்ட் 31ஆம் தேதி முயிசிடம் அந்நிறுவனம் தெரிவித்ததாக, அக்டோபர் 9ஆம் தேதி முயிசும் சங்கமும் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.