📅 Wednesday, 25 November 2026 IST | கார்த்திகை 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil November 25, 2026 07:02 PM

சிங்கப்பூர், ஜப்பான் கடற்படை ஒத்துழைப்பு வலுப்படுகிறது

சிங்கப்பூர், ஜப்பான் கடற்படை ஒத்துழைப்பு வலுப்படுகிறது

இந்த ஆண்டு தங்களின் முதல் இருதரப்புக் கடற்படைப் பயிற்சியை நடத்தியதைத் தொடர்ந்து, ‘சிங்கப்பான்’ (Singapan) எனும் கூட்டுப் பயிற்சியை மேலும் மேம்படுத்தி, அதனை வழக்கமாக நடத்தச் சிங்கப்பூரும் ஜப்பானும் ஒப்புக்கொண்டுள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் பசிபிக் பெருங்கடலில் ஜப்பானுக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் ‘சிங்காப்பான்’ பயிற்சி நடைபெற்றது.

இருதரப்பினரும் தங்களது கப்பல்களுக்கு இடையே அதிகாரிகளை மாற்றிக்கொண்டதுடன் வழக்கமான போர்முறைப் பயிற்சிகள், திட்டமிடல் பயிற்சிகள், கரையில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல்களைப் பார்வையிடுதல் ஆகியவற்றிலும் ஈடுபட்டனர்.

அந்தப் பயிற்சியை மேலும் மேம்படுத்தவும் அதனை வழக்கமாக நடத்தவும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதாகச் சிங்கப்பூரின் தற்காப்பு அமைச்சு புதன்கிழமை (நவம்பர் 25) தெரிவித்தது.

தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் புதன்கிழமை ஜப்பானியத் தற்காப்பு அமைச்சர் கொய்ஸுமி ஷின்ஜிரோவைச் சந்தித்து, வட்டாரப் பாதுகாப்புச் சூழல், இரு நாடுகளின் தற்காப்பு ஒத்துழைப்பு ஆகியவை குறித்துக் கலந்தாலோசித்தபோது அந்த உடன்பாடு எட்டப்பட்டதாக ஜப்பானும் சிங்கப்பூரும் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

தங்கள் கடற்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தப்போவதை அமைச்சர்கள் இருவரும் உறுதிப்படுத்தினர். அதோடு, கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான தகவல் பகிர்வுக்கும் ஒத்துழைப்புக்கும் பங்களிக்கும் முன்னெடுப்புகளை ஊக்குவிக்கப்போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

நீர்மூழ்கிக் கப்பல் மீட்புப் பயிற்சிகளை நடத்துவது குறித்துப் பரிசீலிக்கவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

இரு நாடுகளும் தங்களது அரசதந்திர உறவின் 60ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், தற்காப்பு அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு திரு சான், ஜப்பானுக்கு மேற்கொண்ட அறிமுகப் பயணத்தின்போது அந்தச் சந்திப்பு நடைபெற்றது.

தற்காப்பு ஒத்துழைப்பு குறித்து அமைச்சர்கள் இருவரும் அடிக்கடி சந்திப்புகளை நடத்தியதுடன், அணுக்கமான தொடர்பையும் கட்டிக்காத்து வருகின்றனர்.

தற்காப்பு உறவுகளை வலுப்படுத்துவதிலும் பொதுவான நோக்கத்தைக் கொண்ட பங்காளிகளாக வட்டார, உலகச் சவால்களை இணைந்து எதிர்கொள்வதிலும் இரு நாடுகளும் கொண்டுள்ள வலுவான உறுதிப்பாட்டை புதன்கிழமை அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.