அகல்விளக்கு பதிப்பக உரிமையாளரை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க மனு: சிறப்பு நீதிமன்றத்தில் நாளை உத்தரவு
அகல்விளக்கு பதிப்பக உரிமையாளரை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க மனு: சிறப்பு நீதிமன்றத்தில் நாளை உத்தரவு
சென்னை: கோவை பெரியார் அறிவுலக நூலகத்திற்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் நடந்த முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட ‘அகல் விளக்கு’ பதிப்பக உரிமையாளர் மோகனை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு மீது சென்னை சிறப்பு நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்கவுள்ளது. பெரியார் அறிவுலக நூலகத்திற்கு கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்கள் ஏஐ தொழில்நுட்பம் மூலம் தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதைடுத்து, ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட புத்தகங்களை விநியோகித்ததற்காக அகல்விளக்கு பதிப்பகத்தின் உரிமையாளர் மோகனை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர். நீதிமன்ற காவலில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மோகனை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறை மனு தாக்கல் செய்தது.
இந்த மனு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மோகனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மோகனிடம் விசாரிப்பது இந்த வழக்கில் மிக முக்கியம் என்று கோரினார். அதற்கு மோகன் தரப்பு வழக்கறிஞர், மோகன் அனைத்து ஆவணங்களையும் கொடுத்துள்ளார். அவர் வெறும் பதிப்பாளர்தான்.
அரசு ஊழியர் அல்ல. ஏதாவது ஒரு அதிகாரியின் பெயரை சொல்லுமாறு விசாரணை அதிகாரி மிரட்டுகிறார். அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பார். எனவே, போலீஸ் காவல் விசாரணைக்கு அனுமதிக்க கூடாது என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த மனு மீது வரும் 28ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.