அமெரிக்க வரிவிதிப்பு: இந்தியா பரிசீலனை
புதுடெல்லி: இந்தியப் பொருள்களுக்கு 25 விழுக்காடு வரை வரிவிதிக்க அமெரிக்கா முன்மொழிந்துள்ள நிலையில், அந்த அறிவிப்பு பரிசீலனையில் உள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் இந்த வரி விதிக்கப்படும்.
அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி மேற்கொண்ட நடவடிக்கையின் அடிப்படையில் இந்த முன்மொழிவு வெளியாகியுள்ளது.
உற்பத்தித் துறைகளில் இந்தியா அதிகப்படியான உற்பத்தித் திறனைக் கொண்டுள்ளதாக அமெரிக்கா முன்வைத்த குற்றச்சாட்டை மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சு நிராகரித்துள்ளது.
எந்தத் துறையிலும் இந்தியாவுக்கு அத்தகைய கட்டமைப்பு ரீதியான அதிகப்படியான உற்பத்தித் திறன் இல்லை என்று அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
மருந்துப் பொருள்கள், எஃகு, தகவல் தொழில்நுட்பப் பொருள்கள் போன்ற துறைகளில் இந்தியா வர்த்தக உபரியைக் கொண்டுள்ளதாக அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அமெரிக்க உச்ச நீதிமன்றம் முன்னர் விதிக்கப்பட்ட பரவலான வர்த்தக வரிகளை ரத்து செய்ததைத் தொடர்ந்து, 16 பொருளியல் பிரிவுகளுக்கு எதிராக அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் விசாரணை மேற்கொண்டது.
சீனா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கு 20 முதல் 35 விழுக்காடு வரையிலான வரிகள் முன்மொழியப்பட்டுள்ளன. ஏற்கெனவே ஒப்பந்தம் செய்துள்ள நாடுகளுக்குக் குறைவான வரியே விதிக்கப்படும்.
இடைக்கால இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், வர்த்தகப் பிரச்சினைகளை இந்தப் பேச்சுவார்த்தை கட்டமைப்பிற்குள்ளேயே தீர்க்க வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என அந்நாட்டு அரசு கூறியுள்ளது.
இந்த முன்மொழிவுகள் குறித்து ஜனவரி 5ஆம் தேதிக்குள் எழுத்துபூர்வ கருத்துகளை அனுப்பவும் ஜனவரி 25ஆம் தேதி பொது விசாரணை நடத்தவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
இந்தியாவுக்கு அதிகபட்சமாக 25 விழுக்காடு வரை வரி விதிக்க முன்மொழியப்பட்டுள்ள நிலையில், இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டால் வரியை 17 விழுக்காடாகக் குறைப்பது குறித்துப் பரிசீலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.