📅 Friday, 27 November 2026 IST | கார்த்திகை 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News November 27, 2026 05:01 AM

குடும்ப வன்முறை: காரணங்கள் மற்றும் சிங்கப்பூரில் உதவி

குடும்ப வன்முறை: காரணங்கள் மற்றும் சிங்கப்பூரில் உதவி

குடும்ப வன்முறைக்கான காரணங்களை முழுமையாகக் கண்டறிவது முக்கியம் என்று துறைசார்ந்த வல்லுநர்கள் கூறுகின்றனர்.

வன்முறை ஏற்பட்டதற்கான காரணங்களை மேலோட்டமாகப் பார்க்காமல் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

சிங்கப்பூரில் குடும்ப வன்முறைச் சம்பவங்களும் அவற்றைப் பற்றிய புகார்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகச் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு அண்மையில் வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், குடும்ப வன்முறை பற்றியும் அதைக் கையாளும் வழிகள் குறித்தும் எஸ்பிஎச் அரங்கில் தமிழ் முரசு, கலந்துரையாடல் ஒன்றை நடத்தியது. ‘சந்திப்போம் சிந்திப்போம்’ எனும் நடப்பு விவகாரத் தொடரின் அங்கமாக இது நடைபெற்றது. கலந்துரையாடலில் டிரான்ஸ் குடும்பச் சேவைகள் நிறுவனத்தின் நிலைய இயக்குநர் மணிவண்ணன் பொன்னுசாமியும் சிண்டாவின் மூத்த சமூக ஊழியர் லக்‌‌ஷ்மி ‌ஷண்முகமும் பங்கேற்றனர்.

குடும்ப வன்முறை காரணமாகப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையைப் பார்க்கும் அதே நேரத்தில், ஒரே ஒரு சம்பவமாக இருந்தாலும் அதுவும் முக்கியமே என்றார் திரு மணிவண்ணன். பாதிக்கப்பட்டவர் தனிமனிதராக இருந்தாலும் சம்பவம் அவரை மட்டும் பாதிப்பதில்லை என்றும் குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களையும் பாதிக்கிறது என்றும் அவர் சொன்னார். இதனால், சம்பந்தப்பட்ட குடும்பத்தினரின் ஒட்டுமொத்தப் பாதுகாப்புக்கு உதவும் பொறுப்பு தங்களைப் போன்ற அமைப்புகளுக்கு இருப்பதாகத் திரு மணிவண்ணன் குறிப்பிட்டார்.

அதே நேரத்தில், குடும்ப வன்முறை பற்றிப் பேசுவதற்குச் சிலர் தயங்கக்கூடும். இருப்பினும், அவ்வாறு பாதிக்கப்பட்ட ஒருவர், முன்வந்து அதுகுறித்துச் சொல்வது அவரின் துணிவையே காட்டுவதாகத் திருமதி லெக்‌‌ஷ்மி தெரிவித்தார். அத்தகையோர் தங்களை நாடும்போது அவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகத் திருமதி லெக்‌‌ஷ்மி கூறினார். பாதிக்கப்பட்டோர் இருந்த சூழலும் மீண்டும் ஆபத்து ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் ஆராயப்படும் என்றும் அவர் சொன்னார்.

இவற்றைப் பற்றியும் குடும்ப வன்முறையின் தொடர்பில் மேலும் பல அம்சங்கள் குறித்தும் நிபுணர்கள் தங்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டாலோ உடனடி ஆபத்து ஏற்படக்கூடும் எனக் கருதினாலோ காவல்துறையை 999 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் அல்லது 70999 என்ற எண்ணுக்குக் குறுந்தகவல் அனுப்பலாம்.

தேசியக் குடும்ப வன்முறை, பாலியல் துன்புறுத்தல் தடுப்பு உதவி எண்ணையும் அழைக்கலாம்: 1800-777-0000 (24 மணி நேரமும் செயல்படும் சேவை).

உதவி தேவைப்படுவோர், அருகிலுள்ள குடும்பச் சேவை நிலையம் அல்லது சமூக நல அமைப்புகளையும் அணுகலாம்.