📅 Saturday, 28 November 2026 IST | கார்த்திகை 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News November 27, 2026 03:32 AM

துணைவேந்தர் நியமனம்: முதல்வர் விஜய்க்கு கவர்னர் அர்லேக்கர் கடிதம்

துணைவேந்தர் நியமனம்: முதல்வர் விஜய்க்கு கவர்னர் அர்லேக்கர் கடிதம்

- நமது நிருபர் -

முதல்வர் விஜய்க்கு கவர்னர் அர்லேக்கர் அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:

பல பல்கலைகளில் துணைவேந்தர் பணியிடங்கள் நீண்ட காலமாக காலியாக உள்ளது. அதனால் பட்டமளிப்பு விழா நடத்துவதில் தாமதம் ஏற்படுகிறது. பல்கலைகளின் அன்றாட நிர்வாகம் பாதிக்கப்படுகிறது. இதில் தனிப்பட்ட முறையில் முதல்வர் தலையிட வேண்டும்.

தற்போது பல்கலையில் நிர்வாக முடிவுகளை அரசு அமைத்த கன்வீனர் குழு எடுக்கிறது. இதனால், நிர்வாக மற்றும் கல்வி தேவைகளை பூர்த்தி செய்வதில் பயன் இல்லை.

பல்கலை சட்டங்கள் மற்றும் யுஜிசி விதிமுறைக்கு உட்பட்டு முழுநேர துணைவேந்தர்களை நியமிக்க ஏற்பாடு செய்வது அவசியம். இதனால் மாணவர்களை பாதிக்கப்படுவதை தவிர்க்கலாம்.

முக்கிய பிரச்னை, தேடல் மற்றும் தேர்வுக்குழுவின் கட்டமைப்பு உள்ளது. 2018 ம் ஆண்டு யுஜிசி விதிகளின்படி, குழுவில் யுஜிசி தலைவரின் பிரதிநிதி ஒருவரை சேர்க்க வேண்டும். இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.

தேடல் மற்றும் தேர்வு குழுவில், வேந்தரின் பிரதிநிதி, பல்கலை சிண்டிகேட் பிரதிநிதி, மாநில அரசின் பிரதிநிதி மற்றும் யுஜிசி தலைவரின் பிரதிநிதி இடம்பெறலாம். உறுப்பினர்கள், கல்வியாளர்களாகவும் நிபுணர்களாகவும் இருக்க வேண்டும்.

இக்குழு, துணைவேந்தர் பதவிக்காலம் முடியும் ஆறு மாதங்களுக்கு முன்பே செயல்முறையை தொடங்க வேண்டும். குழு அமைத்த 15 நாட்களுக்குள் விளம்பரப்படுத்த வேண்டும். இரண்டு மாதங்களுக்குள் பரிசீலனை மற்றும் நேர்காணல் முடிக்க வேண்டும். மிக முக்கியமாக, ஒருமனதான முடிவின் வாயிலாக, தகுதியான மூன்று பேரை தேர்வு செய்து, அவர்களை தரவரிசைப்படுத்த வேண்டும்.

ஆலோசனை வாயிலாக, விரைவான தீர்வு ஏற்படும் என்று நம்புகிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கவர்னர் கூறியுள்ளார்.