அண்ணாமலையின் இயக்கத்திற்கு பிரதமர் மோடி, அமித் ஷாவின் ஆசிர்வாதம் இல்லை
அண்ணாமலையின் இயக்கத்திற்கு பிரதமர் மோடி, அமித் ஷாவின் ஆசிர்வாதம் இல்லை - நயினார் நாகேந்திரன்
பாஜக தொண்டர்கள் யாரும் தவறான தகவல்களை நம்பி கட்சியை விட்டு வெளியேற வேண்டாம்; வெளியேறியவர்கள் திரும்பி வரலாம். ஆனால் ஒரே நேரத்தில் இரு இடத்திலும் பயணிக்க முடியாது என்று நயினார் நாகேந்திரன் தெளிவுபடுத்தினார்.
Published : June 6, 2026 at 5:43 PM IST
சென்னை: பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் அரசியல் இயக்கத்திற்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் ஆசிர்வாதம் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘வீ லீடர்ஸ்’ (We Leaders) என்ற புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கியுள்ளார். இருப்பினும், பாஜகவின் மற்றொரு முகம் என்று காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன.
இந்நிலையில், அண்ணாமலையின் அரசியல் இயக்கம் குறித்து, சென்னையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், "அண்ணாமலை தொடங்கியுள்ள புதிய இயக்கத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா அல்லது பாஜக தேசிய தலைமையின் எந்தவித ஆசிர்வாதமும் இல்லை.
பாரதிய ஜனதா கட்சி என்பது தனிநபர்களை மையமாகக் கொண்ட இயக்கமல்ல; இது, தேசம் மற்றும் தேசிய சித்தாந்தத்தின் அடிப்படையில் இயங்கும் கட்சி. கட்சியில் இருந்து பல மூத்த தலைவர்கள் வெளியேறி மீண்டும் கட்சிக்குத் திரும்பிய வரலாறு உள்ளது. ஆனால் கட்சியை விட்டு வெளியேறி தனித்துச் செயல்பட்டு வெற்றி பெற்றதாக எந்த முன்னுதாரணமும் இல்லை.
அண்ணாமலை தொடங்கியுள்ள புதிய இயக்கத்தில் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இணைய வேண்டாம். பாஜகவில் இருப்பவர்கள், பாஜகவில் மட்டுமே இருக்க முடியும். ஒரே நேரத்தில் வேறு இயக்கத்திலும் இருக்க முடியாது" என்று தெரிவித்தார்.
அண்ணாமலை தனது புதிய இயக்கத்தை பிரதமர் மோடியின் ஆசிர்வாதத்துடன் தொடங்கியதாக கூறப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “ஒரு நபர் கட்சியில் இருந்து வெளியேறிய பிறகு அவருக்கு கட்சித் தலைமையின் ஆசிர்வாதம் இருப்பதாக கூற முடியாது" என்று பதிலளித்தார்.
மேலும், "கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியாது. அவர்கள் விரும்பினால் எந்த நேரத்திலும் மீண்டும் பாஜகவில் சேரலாம். சிலர் தவறான வழிகாட்டுதலால் சென்றிருக்கலாம்; அவர்களை மீண்டும் கட்சிக்கு வரவேற்க தயாராக இருக்கிறோம்" என்றும் அவர் கூறினார்.
கடந்த 18 மாதங்களாக கருத்து வேறுபாட்டுடன் இருந்ததாக அண்ணாமலை கூறியிருப்பது குறித்து பதிலளித்த நயினார் நாகேந்திரன், "பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் பங்கேற்ற அனைத்து முக்கிய நிகழ்ச்சிகளிலும் அண்ணாமலை முக்கிய பங்காற்றினார். 2024 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் கூட ஹெலிகாப்டர் மூலம் பல தொகுதிகளில் பிரச்சாரம் செய்தார். கருத்து வேறுபாடுகள் இருந்திருந்தால் அப்போதே தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும்" என்றும் கூறினார்.
“தமிழ்நாட்டில் பாஜக வெறும் 2 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது என்ற கருத்து தவறானது. 2024 மக்களவைத் தேர்தலில் 11 சதவீத வாக்குகளை பெற்றுள்ளோம். அண்மையில் குறைந்த இடங்களில் போட்டியிட்டு சுமார் 22 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளோம். எனவே கட்சியின் வாக்கு வங்கி தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது" என்றும் அவர் தெரிவித்தார்.
பாஜக பலவீனமடைந்துள்ளதாக கூறப்படுவதை மறுத்த அவர், “உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சி பாஜக. இந்திய அளவில் ஆயிரக்கணக்கான சட்டமன்ற உறுப்பினர்களும் 270-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் பாஜகவிற்கு உள்ளனர். தமிழகத்திலும் பாஜக தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகிறது” என்று தெரிவித்தார்.
வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தற்போதைய கூட்டணி தொடரும் என்றும், கட்சியில் எந்தவித உள்கட்சி பிரச்சினையும் இல்லை என்றும் நயினார் நாகேந்திரன் கூறினார்.
ஜூன் 8இல் பாஜக மாவட்டத் தலைவர்கள் கூட்டம்
"திருச்சியில் ஜூன் 8-ஆம் தேதி, பாஜக மாவட்டத் தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடுதல், பிரதமர் மோடியின் தமிழகத்திற்கான சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்தல், சர்வதேச யோகா தின நிகழ்வுகள் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடுகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது" என்றும் அவர் தெரிவித்தார்.
அண்ணாமலை எழுதிய “வணக்கம் தமிழகம் – பிரதமர் மோடி” என்ற புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டிய நயினார் நாகேந்திரன், “தமிழர்களுக்காக மோடி, தமிழகத்திற்காக மோடி, இந்தியாவிற்காக மோடி; படிப்படியாக ஆனால் நிச்சயமாக மோடிக்காகத் தமிழகம்” என்று அவர் எழுதியிருந்ததை சுட்டிக்காட்டி, அதுவே தற்போதைய குற்றச்சாட்டுகளுக்கு பதிலாக அமையும்" என்றார்.
“பாஜக தொண்டர்கள் யாரும் தவறான தகவல்களை நம்பி கட்சியை விட்டு வெளியேற வேண்டாம். சென்றவர்கள் திரும்பி வர விரும்பினால் வரலாம். பாஜக தொடர்ந்து வலுவாக செயல்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.
நிர்மல் குமார் மீது விமர்சனம்
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்த கருத்து குறித்து பேசிய நயினார் நாகேந்திரன், "அமைச்சர் நிர்மல் குமார் சட்டம் படித்தவர். ஆனால் சட்டத்தை மதிக்கிறாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. சட்டம் படித்து சட்டத்துறை அமைச்சராக இருப்பவர், சட்டத்தை மதிக்காமல் இருப்பது எந்தவகையில் நியாயம்.
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றியே தீர வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ள நிலையில் 2 ஆண்டுகளுக்கு முந்தைய நிலையே தொடரும் என்றால், இவர் சட்டத்துறை அமைச்சராக இருப்பதற்கு தகுதி உள்ளதா?" என்று கேள்வி எழுப்பினார்.