📅 Tuesday, 18 August 2026 IST | ஆவணி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 18, 2026 06:04 PM

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தில் உதவித்தொகை வழங்கவில்லை என்பது தவறான தகவல்

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தில் உதவித்தொகை வழங்கவில்லை என்பது தவறான தகவல்

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தில் உதவித்தொகை வழங்கவில்லை என்பது தவறான தகவல் - ஆதிதிராவிடர் நலத்துறை

மாணவர் தனது ஆராய்ச்சி செலவு தொடர்பான விவரங்களை ஜூலை 28 அன்று அளித்தார். அவை பரிசீலனையில் உள்ளன என்று ஆதிதிராவிடர் நலத் துறையின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.

Published : August 18, 2026 at 5:47 PM IST

சென்னை: அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின்கீழ் பயிலும் எந்தவொரு மாணவருக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை என்று கூறுவது தவறான தகவல் என்று ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து மாணவர்களுக்கும் உரிய நேரத்தில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு, அவர்கள் தங்கள் படிப்பை தொடர்ந்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் மலேசியா தேசிய பல்கலைக்கழகத்தில் படிக்கச் சென்ற பாரதிதாசன் என்ற மாணவர், கல்வி உதவித்தொகை கிடைக்காமல் தாம் மிகவும் சிரமப்படுவதாக வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ வைரலானது.

நிலுவையில் உள்ள கல்வி உதவித்தொகை மற்றும் ஆராய்ச்சி நிதிகள் விரைவில் விடுவிக்கப்படாவிட்டால், எனது ஆராய்ச்சிப் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டிய சூழல் ஏற்படலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

சமூகநீதித் துறை அமைச்சர், உயர்கல்வித் துறை செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் முறைப்படி தெரிவித்தும் தனக்கு எந்தவித உதவியும் கிடைக்கவில்லை என்றும், தலித் மாணவர்கள் ஆராய்ச்சி படிப்புகளுக்கான வாய்ப்பை மட்டும் இந்த அரசு நிறுத்துகிறது என்றும் அவர் குற்றம்சாட்டி இருந்தார்.

ஆனால், இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி ஒருவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "மாணவர் பாரதிதாசன் முதலாம் ஆண்டிற்கான 36 லட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகையைப் பெற்றுள்ளார். இரண்டாம் ஆண்டிற்கான பல்கலைக்கழகக் கல்விக் கட்டணம் மற்றும் 6 மாதங்களுக்கான தங்குமிடம் மற்றும் உணவுச் செலவுகள் என மொத்தம் 12.21 லட்சம் ரூபாய் உரிய நேரத்தில் (மே மற்றும் ஜூன் 2026) விடுவிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள செலவுகள் தொடர்பான விவரங்களை அவர் ஜூலை 28 அன்று சமர்ப்பித்துள்ளார். அவை தற்போது பரிசீலனையில் உள்ளன. அவர் இன்னும் அதற்கான பில்களை (bills) சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. அவர், ஆராய்ச்சிப் பணிகளுக்காக 19 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை வாங்கியுள்ளதாக அளித்துள்ள விவரங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தின் கீழ் பயிலும் எந்தவொரு மாணவருக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை என்று கூறுவது தவறான தகவல். அனைத்து மாணவர்களுக்கும் உரிய நேரத்தில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது, மேலும் அவர்கள் தங்கள் படிப்பைத் தொடர்ந்து வருகின்றனர்‌" என்று தெரிவித்தார்.