📅 Saturday, 28 November 2026 IST | கார்த்திகை 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil November 28, 2026 11:01 AM

அரசாங்க அதிகாரிபோல் ஆள்மாறாட்டம்: இரு மலேசியர்கள்மீது குற்றச்சாட்டு

அரசாங்க அதிகாரிபோல் ஆள்மாறாட்டம்: இரு மலேசியர்கள்மீது குற்றச்சாட்டு

அரசாங்க அதிகாரிபோல் ஆள்மாறாட்டம் செய்து ரொக்கத்தையும் மதிப்புமிக்க பொருள்களையும் ஏமாற்றி பெற்றுக்கொண்ட இரண்டு மலேசிய ஆடவர்கள்மீது கூட்டுச் சதியில் மோசடி செய்ததாக சனிக்கிழமை (நவம்பர் 28) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.

அதன் விவரங்களை காவல்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. கடந்த திங்கட்கிழமை (நவம்பர் 23) மோசடியில் பாதிக்கப்பட்ட 71 வயது முதியவரிடமிருந்து காவல்துறைக்குப் புகார் கிடைத்தது.

அந்த முதியவரை நபர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து, தாம் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் பிரதிநிதி எனவும் பாதிக்கப்பட்டவரின் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது எனவும் கூறினார். எனவே, அந்த முதியவரிடம் உள்ள மொத்த பணம் உள்ளிட்ட மதிப்புமிக்க சொத்துகளின் விவரங்களைத் தரும்படி மோசடிக்காரர் கேட்டுள்ளார்.

பிறகு அந்த அழைப்பு மற்றொருவரிடம் மாற்றப்பட்டு, தாமும் ஆணைய அதிகாரி என்று அடையாளப்படுத்திக்கொண்டார். கள்ளப் பணப்பரிமாற்ற விசாரணையில் பாதிக்கப்பட்டவர் உள்ளார் எனவும் போலியாகத் தயாரிக்கப்பட்ட ஒரு நீதிமன்ற ஆவணத்தைக் காட்டி அவரது அனைத்துச் சொத்துகளையும் வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

அதனை உண்மை என நம்பி, அந்தப் பாதிக்கப்பட்ட நபர் அதே நாளில் ஏறத்தாழ $9,000 மதிப்புள்ள ரொக்கத்தையும் நகைகளையும் முன்பின் அறியாத ஆடவர் ஒருவரிடம் ஒப்படைத்தார்.

விசாரணையில், காவல்துறை அந்த 39 வயது ஆடவரை அடையாளம் கண்டு வியாழக்கிழமை (நவம்பர் 26) கைது செய்து, பாதிக்கப்பட்டவர் கொடுத்த ரொக்கத்தைப் பறிமுதல் செய்தது.

பிறகு வெள்ளிக்கிழமை காவல்துறையின் இணையக் குற்றங்களுக்கான தளபத்தியம், முதலில் கைதான ஆடவரைச் சந்தித்து மோசடியில் பெற்றவற்றை எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்த 33 வயது ஆடவரை அவரது வீட்டில் கைதுசெய்தது.

அவரிடம் இரண்டு ஆடம்பரக் கைக்கடிகாரங்களுடன் $35,000 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. அனைத்துலக மோசடிக் கும்பலுடன் இரு ஆடவர்களும் தொடர்பில் இருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

அடையாளம் தெரியாத அக்கும்பலால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பொருள்களையும் ரொக்கத்தையும் எடுத்துவரும் பணி அந்த 39 வயது ஆடவருக்கு வழங்கப்பட்டது. ஒப்படைக்கப்பட்ட பொருள்களை எடுத்துவரும் நபர்களிடமிருந்து அவற்றைப் பெற்றுக்கொள்ளும் பணி அந்த 33 வயது ஆடவருக்குக் கொடுக்கப்பட்டது என்று காவல்துறை விளக்கியது.

இதுபோன்ற மோசடிக் குற்றங்களுக்காக இதுவரை 100 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்களில் பெரும்பாலோர் மலேசியர்கள் என்றும் காவல்துறை தெரிவித்தது.

இவ்வகைக் குற்றங்களுக்கு 10 ஆண்டுகள் சிறை, $500,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.