📅 Sunday, 29 November 2026 IST | கார்த்திகை 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil November 28, 2026 11:01 AM

சிங்கப்பூரில் $580,000 போதைப்பொருள் பறிமுதல்: ஐவர் கைது

சிங்கப்பூரில் $580,000 போதைப்பொருள் பறிமுதல்: ஐவர் கைது

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (சிஎன்பி) புதன்கிழமை (நவம்பர் 25) மேற்கொண்ட இரு சோதனை நடவடிக்கைகளில் $580,000 மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, ஐந்து சிங்கப்பூர் ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்களில் 15 கிராமுக்கும் மேற்பட்ட சுத்தமான ஹெராயின் போதைப்பொருளைக் கடத்திய சந்தேகத்தில் 44, 66 வயதுடைய இருவர் அடங்குவர். அக்குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மரண தண்டனையை எதிர்நோக்குகின்றனர்.

சோதனைகளில் 5.265 கிலோகிரம் ஹெராயின், 85 கிராம் எக்ஸ்டசி, 80 கிராம் ஐஸ், 150 எரிமின்-5 மாத்திரைகள் ஆகியவற்றோடு $8,658.01 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) வெளியிட்ட அறிக்கையில் சிஎன்பி விளக்கியது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்கள், 2,550 போதைப் புழங்கிகள் ஒரு வாரத்துக்குப் பயன்படுத்தும் அளவில் இருந்தன எனவும் சிஎன்பி கூறியது.

சோதனை நடந்த அன்றைய தினம் காலை சின் சுவீ ரோட்டில் உள்ள வீடமைப்புப் பகுதியில் 66 வயது ஆடவர் முதலில் கைது செய்யப்பட்டார்.

அவரை அங்கிருந்த ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றபோது அதனுள் இருந்த சிலர் கதவைத் திறக்க மறுத்தனர். ஆகவே அதிகாரிகள் வலுக்கட்டாயமாக அந்த வீட்டுக்குள் நுழைந்தனர். அங்கு 66,69, 74 வயது சிங்கப்பூரர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போதைப்பொருளும் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

வீட்டுக்குள் கைதான 66 வயது ஆடவர் போதைப்பொருள் கடத்திய சந்தேகத்தில் கைதானவர் எனவும் மீதம் இருந்த மூவரும் போதைப் புழங்கிகள் என்று சிஎன்பி குறிப்பிட்டது.