ஆசிய எதிர்கால மாநாடு: சிங்கப்பூர் பங்கேற்பாளர் குரல்கள்
மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு நிலையத்தில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) நடைபெற்ற ஆசிய எதிர்கால உச்சநிலை மாநாட்டில் ஆசியாவின் பொருளியல் வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம், பிற நாடுகளுடனான உறவுகள் எனப் பல்வேறு தலைப்புகளில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
மாநாட்டில் பங்கேற்றோரின் கருத்துகளைத் தமிழ் முரசு கேட்டறிந்தது.
2025ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் வரிகளை அறிவித்தபோதிலும் பெரும்பாலான நாடுகள் வரிகளை உயர்த்தாமல் குறைத்ததால் உலக வர்த்தகமும் பொருளியலும் மிகுந்த மீள்திறனுடன் வளர்ச்சியடைந்ததாக ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றத்தின் முன்னாள் தலைவர் கிஷோர் மஹ்புபானி குறிப்பிட்டார்.
துணைப் பிரதமர் கான் கிம் யோங் மாநாட்டில் வலியுறுத்திய ‘நம்பிக்கை’ எனும் சொல்லைச் சுட்டிக்காட்டிய அவர், அனைத்துலகச் சமூகத்தில் சிங்கப்பூர் பெற்றுள்ள அளப்பரிய மதிப்பையும் நம்பிக்கையையும் ஒருபோதும் இழந்துவிடக் கூடாது என்று கூறினார்.
மேலும், உலக வர்த்தக அமைப்பின் ஒருமித்த கருத்து அடிப்படையிலான விதிமுறைகளால் முன்னேற்றம் காண்பது கடினமாக இருந்தாலும் அது சாத்தியமற்றது அன்று என்றும் முக்கிய வர்த்தக நாடுகள் அனைத்தும் உலக வர்த்தக நிறுவனத்தைத் தொடர்ந்து வலுப்படுத்துவதில் உறுதியாக உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
புவிசார் அரசியல் மாற்றங்களும் செயற்கை நுண்ணறிவின் வருகையும் சிங்கப்பூர், உலகப் பொருளியல், நிதிச் சந்தைகள், நிதி மேலாண்மைத் துறை ஆகியவற்றின்மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்த பயனுள்ள, நடைமுறைக்கு ஏற்ற நுண்ணறிவுகளை மாநாடு வழங்கியதாக ஓசிபிசி வங்கியின் முதலீட்டு உத்தி நிர்வாக இயக்குநர் வாசு மேனன் கூறினார்.
“ஒரு மாணவராகவும், வேலைச் சந்தையில் அடியெடுத்து வைக்கவுள்ள ஒருவராகவும் எதிர்காலத்தை எவ்வாறு நோக்க வேண்டும், என்னை எவ்வாறு நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள இம்மாநாடு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது,” என்று சிம் பல்கலைக்கழக மாணவர் நைமிஷ் கண்டுலா சொன்னார்.
அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு அறிவிப்புகள், என்விடியா தொடர்பான மாற்றங்கள், சிங்கப்பூரின் எதிர்வரும் ஆசியான் தலைமைப் பொறுப்பு, செயற்கை நுண்ணறிவு ஆகிய முக்கிய விவகாரங்கள் குறித்துத் தலைவர்களும் கொள்கை வகுப்பாளர்களும் பகிர்ந்துகொண்ட கருத்துகள் மிகவும் பயனுள்ளதாய் இருந்ததாக டெர்ரா நிறுவன விவகாரங்கள் நிறுவனத்தின் நிறுவனர் மல்மிந்தர்ஜித் சிங் கூறினார்.
“அமெரிக்கா, சீனா ஆகிய இரு பெரும் வல்லரசுகளுக்கு இடையிலான போட்டியில் சிங்கப்பூரின் நிலைப்பாடு என்ன, புவிசார் அரசியல் சூழலைச் சிங்கப்பூர் எவ்வாறு கையாள்கிறது என்பதை இருவரும் முக்கியமாகச் சுட்டிக்காட்டினர்.
“குறிப்பாக, அடுத்த ஆண்டு ஆசியான் தலைமைப் பொறுப்பைச் சிங்கப்பூர் ஏற்கவுள்ள நிலையில், ஆசியானை மேலும் ஒருங்கிணைந்த பொருளியல் மண்டலமாக முன்னெடுத்துச் சென்று அதன் மூலம் சிங்கப்பூரர்களுக்கு எத்தகைய பொருளியல் நன்மைகளைப் பெற்றுத் தருவது என்பது குறித்து துணைப் பிரதமர் கான் கிம் யோங்கும் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் விரிவாகப் பேசினர்,” என்று டாட்டா ஆலோசனை சேவைகள் நிறுவனத்தின் ஆசியான் நிறுவன விவகாரங்கள் பிரிவுத் தலைவர் அபாஸ் அலி முகம்மது இர்ஷாத் கூறினார்.
இந்த மாநாட்டை எஸ்பிஎச் மீடியா நிறுவனத்தின் முன்னணி ஊடகங்களான ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், பிஸ்னஸ் டைம்ஸ், சாவ்பாவ், பெரித்தா ஹரியான், தமிழ் முரசு ஆகியவை முதன்முறையாக ஒன்றிணைந்து நடத்துகின்றன.
இந்நிகழ்ச்சிக்கு ஓசிபிசி வங்கி முதன்மை ஆதரவாளராகச் செயல்படுகிறது. அமேசான் வெப் சர்வீசஸ் அதிகாரபூர்வ ‘கிளவுட்’ பங்காளியாகவும் மரினா பே சேண்ட்ஸ் அதிகாரபூர்வ இடவசதிப் பங்காளியாகவும் இணைந்துள்ளன.