“அர்ப்பணிப்பு, ஆர்வம் பெருமைப்பட வைக்கின்றன”.. பிரதமர் மோடி தேசிய விளையாட்டு தின வாழ்த்து
“அர்ப்பணிப்பு, ஆர்வம் பெருமைப்பட வைக்கின்றன”.. பிரதமர் மோடி தேசிய விளையாட்டு தின வாழ்த்து
டெல்லி: இந்தியாவில் இன்று (ஆகஸ்ட் 29) தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும், இந்திய ஹாக்கி அணியின் ஜாம்பவான் மேஜர் தியான் சந்தின் பிறந்தநாளை ஒட்டி அவருக்கு தங்களது மரியாதையைச் செலுத்தினர்.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29 அன்று மேஜர் தியான் சந்தின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்படுகிறது. இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, "விளையாட்டு ஆர்வலர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். உங்களின் அர்ப்பணிப்பு, ஆர்வம் மற்றும் உறுதிப்பாடு ஆகியவை அனைவரையும் பெருமைப்பட வைக்கின்றன. ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தியான் சந்திற்கு நமது அஞ்சலியைச் செலுத்துகிறோம். அவரது அசாத்திய திறமை வரும் தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "விளையாட்டு என்பது வெறும் வெற்றியைப் பற்றியது மட்டுமல்ல என்று நான் எப்போதும் நம்புகிறேன். அது கனவு காணவும், கடினமாக உழைக்கவும், தோல்விகளைக் கையாளவும் மற்றும் தொடர்ந்து முன்னேறிச் செல்லவும் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. இந்த தேசிய விளையாட்டு தினத்தில், நமது இளைய தலைமுறையினர் அதிக அளவில் விளையாட முன்வர வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
விளையாட்டின் முக்கியத்துவத்தை இளைய தலைமுறையினருக்கு உணர்த்தவும், உடற்பயிற்சி, ஒழுக்கம் மற்றும் குழு உணர்வை வளர்க்கவும் இந்த நாள் முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டின் விளையாட்டு பாரம்பரியத்தை நினைவுகூரவும், விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கவும் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியாவில் கிரிக்கெட் பெரிய விளையாட்டாக மாறும் முன் ஹாக்கி தான் முதன்மை விளையாட்டாக இருந்தது. அப்போது மேஜர் தியான் சந்த் ஹாக்கி அணியில் நட்சத்திர வீரராகவும், கேப்டனாகவும் பல்வேறு சாதனைகளை செய்தார். இந்திய ஹாக்கி அணி சுதந்திரத்திற்கு முன்பே பல முறை ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கங்களை வென்றது. அதன் காரணமாகவே மேஜர் தியான் சந்த்தின் பிறந்த நாள் இந்தியாவின் தேசிய விளையாட்டு தினமாக மாறியது.