📅 Friday, 27 November 2026 IST | கார்த்திகை 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Australia Tamil November 24, 2026 07:33 PM

அவமானப்பட்டும் திருந்தாத ஆஸ்திரேலியா.. வேதனையில் கோச் செய்த செயல்.. துபாயில் நடந்த நிகழ்வு

அவமானப்பட்டும் திருந்தாத ஆஸ்திரேலியா.. வேதனையில் கோச் செய்த செயல்.. துபாயில் நடந்த நிகழ்வு

அவமானப்பட்டும் திருந்தாத ஆஸ்திரேலியா.. வேதனையில் கோச் செய்த செயல்.. துபாயில் நடந்த நிகழ்வு

சிட்னி: கிரிக்கெட் உலகையே உலுக்கிய 2018 கேப்டவுன் சான்ட்பேப்பர் விவகாரம் நடந்து சில மாதங்களிலேயே, ஆஸ்திரேலிய வீரர்கள் மீண்டும் பந்தை சேதப்படுத்த திட்டமிட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவின் பிரபல ஊடகமான எஸ்.இ.என். செய்தி நிறுவனத்தின் மூத்த பத்திரிகையாளர் ஜெரார்ட் வாட்லி நடத்திய புதிய புலனாய்வு விசாரணை, அந்நாட்டு கிரிக்கெட் வட்டாரத்தில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கேப்டவுன் டெஸ்டில் சான்ட்பேப்பரால் பந்தை சேதப்படுத்தி சிக்கியது ஆஸ்திரேலிய அணி. அந்த குற்றத்திற்காக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோருக்கு 12 மாதங்களும், கேமரூன் பான்கிராப்டுக்கு 9 மாதங்களும் தடை விதிக்கப்பட்டது. உலக அரங்கில் ஆஸ்திரேலியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய இந்த சம்பவம் நடந்து சில மாதங்களே ஆன நிலையில், 2018 அக்டோபரில் துபாயில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த முதல் டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்த முயன்றுள்ளனர்.

துபாய் டெஸ்டில் பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்தபோது, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களால் பந்தை ஸ்விங் செய்ய முடியவில்லை. அப்போது களத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர் ஒருவர், "மிண்ட் மிட்டாய் யாரிடம் உள்ளது? இன்று பந்தை யார் பக்குவப்படுத்த போகிறீர்கள்?" என்று கேட்டுள்ளார். அதாவது மிட்டாயின் பிசுபிசுப்புத்தன்மையை பயன்படுத்தி பந்தை சேதப்படுத்தலாம் என ஒரு வீரர் கூறி உள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மற்றொரு வீரர் ஆவேசமடைந்தார். பந்து சேத விவகாரத்தில் அவமானப்பட்டு சில மாதங்களே ஆகும் நிலையில், மீண்டும் அதே தவறை செய்ய எப்படி துணிச்சல் வந்தது என அவர் கோபமாக கேள்வி எழுப்பினார். எனினும், அந்த எதிர்ப்பை மீறி ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து மிண்ட் மிட்டாய்களை எடுத்து வர மாற்று ஃபீல்டர் ஒருவர் அனுப்பப்பட்டார்.

களத்தில் என்ன நடக்கிறது என்பதை தூரத்திலிருந்து கவனித்த அப்போதைய கேப்டன் டிம் பெய்ன் சுதாரித்துக் கொண்டார். உடனடியாக அந்த மாற்று வீரரை சைகை காட்டி தடுத்து நிறுத்தி, எதையும் மைதானத்திற்குள் கொண்டு வர வேண்டாம் என கறாராக திருப்பி அனுப்பினார். இதனால் அந்த முயற்சி பாதியிலேயே முறியடிக்கப்பட்டது.

அன்றைய நாள் ஆட்டம் முடிந்த பிறகு ஆஸ்திரேலிய ட்ரெஸ்ஸிங் ரூமில் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கடும் ஆத்திரத்தில் வெடித்தார். வீரர்களை நேருக்கு நேர் நிறுத்தி தனது கடுமையான கோபத்தை வெளிப்படுத்தினார். அப்போது தனது வரலாற்று சிறப்புமிக்க பேக்கி கிரீன் தொப்பியை கழற்றி, தனது பின்புறத்தில் தேய்த்துக் காட்டினார்.

"உங்கள் செயல்களால் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் மாண்பையும், இந்த தொப்பியின் பாரம்பரியத்தையும் இப்படித்தான் அசிங்கப்படுத்துகிறீர்களா?" என்பதை உணர்த்தும் வகையில் அவர் வேதனையுடன் அந்த ஆக்ரோஷமான செய்கையை செய்து காட்டினார். ஆஸ்திரேலிய வீரர்களின் இந்த திருந்தாத புத்தி பயிற்சியாளரை நிலைகுலைய வைத்தது.

இதையடுத்து மைதானத்திற்குள் வீரர்கள் மிண்ட் மிட்டாய் உள்ளிட்ட எந்தவித பொருட்களையும் கொண்டு செல்லக்கூடாது என டிம் பெய்ன் தடை விதித்தார். டிரிங்க்ஸ் இடைவேளையின் போது கூட இனிப்புகளை கொண்டு வரக்கூடாது என்று உத்தரவிட்டார். அணி நிர்வாகத்தினரிடமும் பேசிய பெய்ன், தனது தலைமையில் எந்தவித முறைகேட்டிற்கும் இடமில்லை என உறுதியாக தெரிவித்தார்.

இந்த புலனாய்வு அறிக்கையில் மேலும் ஒரு அதிரடி ரகசியம் அம்பலமாகியுள்ளது. தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் பந்து சேதம் செய்த விவகாரம் வெடித்த உடனேயே, ஹோட்டலில் வைத்து டேவிட் வார்னரை மிட்செல் மார்ஷ் நேருக்கு நேர் கடுமையாக எச்சரித்துள்ளார்.

அந்த விவகாரத்தில் இளம் வீரரான பான்கிராப்ட் பழியை தன் மீது மட்டுமே சுமக்க முன்வந்தார். கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தும் தனது பங்கிற்கு பொறுப்பேற்றார். ஆனால் மூளையாக செயல்பட்ட வார்னர் தப்பிக்க முயன்றார். அப்போது மிட்செல் மார்ஷ் வார்னரிடம் பாய்ந்து சென்று, "உன்னால் இதிலிருந்து தப்பிக்க முடியாது. உனக்காக பான்கிராப்ட் மட்டும் ஒட்டுமொத்த பழியையும் சுமப்பதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" என முகத்திற்கு நேராக எச்சரித்தார். அதன் பின்னரே வார்னர் தனது தவறை ஒப்புக்கொள்ள சம்மதித்தார்.

சான்ட்பேப்பர் விவகாரத்திற்கு முன்பாகவே நீண்ட காலமாகவே ஆஸ்திரேலிய அணியில் சான்ட்பேப்பர் இல்லாமல் வேறு பல வழிகளில் பந்தை சேதப்படுத்தும் பழக்கம் வழக்கத்தில் இருந்ததாகவும் இந்த புலனாய்வு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. தற்போது கேப்டனாக உள்ள பாட் கம்மின்ஸ், ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் தங்களுக்கு எதுவும் தெரியாது என கூறிவரும் நிலையில், அவமானப்பட்ட பிறகும் ஆஸ்திரேலிய அணி திருந்த முயலவில்லை என்ற இந்த புதிய ஆதாரங்கள் உலக கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.