ஜாம்பவான் ரெக்கார்டை முறியடித்த NZ கேப்டன் டாம்.. இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் வரலாறு
ஜாம்பவான் ரெக்கார்டை முறியடித்த NZ கேப்டன் டாம்.. இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் வரலாறு
கிறைஸ்ட்சர்ச்: இந்தியாவுக்கு எதிராக நடக்கும் 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முன்னாள் ஜாம்பவான் வீரரை பின்னுக்குத் தள்ளி அவர் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
வெலிங்டனில் நடந்த முதல் டெஸ்டின் 2 இன்னிங்ஸ்களிலும் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்த லாதம், பிரெண்டன் மெக்கல்லமின் சாதனையை முறியடிக்க வெறும் 4 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. கிறைஸ்ட்சர்ச்சில் தொடக்க வீரராக களமிறங்கிய அவர், 3வது ஓவரின் 3வது பந்தில் தனது 4வது ரன்னை எட்டியபோது இந்த சாதனையை நிகழ்த்தினார். 101 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய மெக்கல்லம் 6,453 ரன்கள் எடுத்திருந்தார். தற்போது லாதம் தனது 97வது டெஸ்டிலேயே 6,454 ரன்களை கடந்து அவரை முந்தியுள்ளார்.
நியூசிலாந்து டெஸ்ட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் 110 போட்டிகளில் 9,515 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ராஸ் டெய்லர் 7,683 ரன்களுடனும், ஸ்டீபன் பிளெமிங் 7,172 ரன்களுடனும் முதல் 3 இடங்களில் உள்ளனர். தற்போது மெக்கல்லத்தை பின்னுக்குத் தள்ளி டாம் லாதம் 4வது இடத்தை பிடித்துள்ளார்.
மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அரங்கிலும் டாம் லாதம் மற்றொரு புதிய மைல்கல்லை எட்டினார். இந்தப் போட்டியில் அரைசதம் கடந்த அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 3,000 ரன்களை கடந்த 2வது நியூசிலாந்து பேட்டர் என்ற பெருமையை பெற்றார். மேலும் கேன் வில்லியம்சனை முந்தி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நியூசிலாந்துக்காக அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். முதல் டெஸ்டில் டக் அவுட்டான லாதம், 2வது டெஸ்டில் இந்த வரலாற்று சாதனையுடன் மீண்டுள்ளது நியூசிலாந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.