Bigg Boss Tamil 10 : பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லப்போவது யார்... யார்? போட்டியாளர்கள் லிஸ்ட்டில் அதிரடி மாற்றம்
Bigg Boss Tamil 10 : பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லப்போவது யார்... யார்? போட்டியாளர்கள் லிஸ்ட்டில் அதிரடி மாற்றம்
Bigg Boss Tamil Season 10 contestants : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்கள் யார்... யார் என்பது பற்றிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் வரும் செப்டம்பர் 6-ம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய சீசன் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், போட்டியாளர்கள் தொடர்பான பல்வேறு தகவல்களும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. கடந்த காலங்களில் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் வெவ்வேறு காலகட்டங்களில் தொடங்குவது வழக்கம். ஆனால் இந்த முறை அனைத்து மொழிகளிலும் நிகழ்ச்சிகளை ஒரே காலகட்டத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல், இந்த சீசனில் சாமானிய மக்களுக்கும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் வாய்ப்பை வழங்கும் வகையில் ‘பிக்பாஸ் தி காமன் மேன்’ என்ற பிரத்யேக நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் தேர்வு செய்யப்படும் சிலர் பிக்பாஸ் தமிழ் சீசன் 10-ன் போட்டியாளர்களாக களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சில போட்டியாளர்களின் பெயர்கள் அடிபட்டு வரும் நிலையில், தற்போது மேலும் சில பிரபலங்களின் பெயர்கள் போட்டியாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Bigg Boss Common Man : பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியில் முனியம்மாவுக்கு செக் வைத்த டீம்! ஷாப்பிங் டாஸ்க்கில் வெடித்த சர்ச்சை
சபானா - ஆர்யன்: யார் வரப்போகிறார்கள்?
‘செம்பருத்தி’ சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சபானா மற்றும் அவரது கணவர் ஆர்யன் ஆகிய இருவரின் பெயர்களும் பிக்பாஸ் சீசன் 10 தொடர்பாக பேசப்பட்டு வருகின்றன. இருவரும் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும், இருவரில் ஒருவர் மட்டுமே பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக ஆர்யனின் பெயர்தான் போட்டியாளர் பட்டியலில் வலுவாக அடிபடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘ஈரமான ரோஜாவே’ வினோத் பிக்பாஸ் வீட்டுக்குள்?
சின்னத்திரை ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற ‘ஈரமான ரோஜாவே’ தொடரில் நடித்த வினோத் இந்த சீசனில் போட்டியாளராக களமிறங்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்தத் தொடரில் அவருக்கு ஜோடியாக நடித்த பவித்ரா, ஏற்கனவே பிக்பாஸ் தமிழ் சீசன் 8-ல் போட்டியாளராக பங்கேற்றிருந்தார். தற்போது அதே தொடரைச் சேர்ந்த வினோத்தின் பெயரும் பிக்பாஸ் 10 போட்டியாளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பது சின்னத்திரை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஜாய் கிறிசில்டா பிக்பாஸ் போட்டியாளரா?
கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்ட பெயர்களில் ஒன்றான ஜாய் கிறிசில்டாவும் இந்த சீசனில் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜைச் சுற்றிய சர்ச்சையில் அவரது பெயர் பேசுபொருளானது. தனது குழந்தையின் தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் தான் என்பதை நிரூபிக்க சட்டரீதியாக போராடிய ஜாய், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க உள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேக்கப் துறையில் இருந்தும் போட்டியாளர்?
இவர்களுடன், இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கும் மேக்கோவர் ஆர்ட்டிஸ்ட் அஸ்மிதாவும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மேக்கப் துறையைச் சேர்ந்த மற்றொரு நபரும் இந்த சீசனில் போட்டியாளராக இடம்பெறலாம் என்ற பேச்சு உள்ளது. இதனால் இந்த முறை பிக்பாஸ் வீட்டில் சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்களுடன் வெவ்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களையும் பார்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முரளி விஜய்யும் பிக்பாஸ் வீட்டுக்குள்?
முன்னதாகவே பிக்பாஸ் சீசன் 10 தொடர்பாக பேசப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளி விஜய் பெயரும் தற்போது மீண்டும் அடிபடுகிறது. அவர் இந்த சீசனில் போட்டியாளராக பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இவை அனைத்தும் தற்போது வெளியாகி வரும் தகவல்கள் மட்டுமே என்பதால், பிக்பாஸ் தமிழ் சீசன் 10-ன் அதிகாரப்பூர்வ போட்டியாளர்கள் பட்டியல் வெளியாகும் வரை உறுதியான தகவல் என்று கூற முடியாது. புதிய சீசன் தொடங்கும் நிலையில், யார் யார் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.