📅 Sunday, 29 November 2026 IST | கார்த்திகை 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News November 29, 2026 03:32 PM

சாங்கி சாலை விரிவாக்கம்: தற்போதைய திட்டங்கள்

சாங்கி சாலை விரிவாக்கம்: தற்போதைய திட்டங்கள்

சாங்கி விமான நிலையத்தில் எதிர்காலத்தில் அமையவுள்ள ஐந்தாம் முனையத்தைச் சுற்றியுள்ள சாலைக் கட்டமைப்பை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, சாங்கி கோஸ்ட் வாக்கிற்கு அருகிலுள்ள தானா மேரா கோஸ்ட் சாலையை அகலப்படுத்தும் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தேசிய சேவை உல்லாச தங்குவிடுதிகளுக்கும் சாங்கி ஈஸ்ட் டிரைவ் சாலைக்கும் அருகிலுள்ள பகுதியில் இப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

சாங்கி விமான நிலையத்தில் 2027 மார்ச் முதல் அதன் மூன்றாம் விமான ஓடுபாதை செயல்படவுள்ளது. அதற்கு அருகில் புதிய சாங்கி ஈஸ்ட் மேம்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தின் எல்லையில் சாங்கி ஈஸ்ட் டிரைவ் அமைந்துள்ளது.

ஜிபிஸ் எனப்படும் அரசாங்கப் பணிகள், கொள்முதல், ஒப்பந்தங்களுக்கான இணையத்தளத்தில் சாலை விரிவாக்கத் திட்டத்துக்கான ஏலக்குத்தகையை நிலப் போக்குவரத்து ஆணையம் கடந்த நவம்பர் 16ஆம் தேதி கோரியது.

புதிய திட்டத்தின்படி, சாலை அகலப்படுத்தப்படுவதோடு, மேம்பாலச் சாலைகளும் பாலங்களும் அமைக்கப்படும் என்று நவம்பர் 26ஆம் தேதி ஆணையம் தெரிவித்திருந்தது.

விரிவான சாங்கி தெற்குப் பகுதி பெருந்திட்டத்தின் ஓர் அங்கமான பரந்த சாலை மேம்பாட்டுப் பணிகளின் மூன்றாம் கட்டமும் இறுதிப் பகுதியுமாக இது மேற்கொள்ளப்படுகிறது.

கடந்த 2023ல் அறிவிக்கப்பட்ட இத்திட்டம், 2034க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓர் ஆண்டில் 50 மில்லியன் பயணிகள் வந்துபோகக்கூடிய அளவில் கட்டமைக்கப்படும் சாங்கி விமான நிலையத்தின் ஐந்தாம் முனையம், 2030களின் மத்தியில் திறக்கப்படும்.

முதலாம், மூன்றாம் முனையங்களின் மொத்தக் கையாளும் திறனைவிட இது அதிகம் கொண்டிருக்கும். ஹோட்டல்கள், அலுவலகங்கள் எனப் பல வசதிகளைக் கொண்ட 1,080 ஹெக்டர் சாங்கி ஈஸ்ட் திட்டத்தினுள் இது உள்ளடங்கும்.

இறுதிக்கட்டப் பணிகளில் தானா மேரா கோஸ்ட் சாலையில் 3.5 கிலோமீட்டர் புதிய சைக்கிளோட்டப் பாதைகளும் பூங்கா இணைப்புகளும் அமைக்கப்படும்.

முந்தைய கட்டங்களில் சாங்கி மேம்பாலச்சாலை மாற்றியமைக்கப்பட்டு, ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வேயும் ஸிலின் அவென்யூவும் மேம்படுத்தப்பட்டன.