📅 Sunday, 29 November 2026 IST | கார்த்திகை 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil November 29, 2026 04:32 PM

ஏஐ குறுநாடகங்கள்: சிங்கப்பூர் மூத்தோரின் புதிய ஈடுபாடு

ஏஐ குறுநாடகங்கள்: சிங்கப்பூர் மூத்தோரின் புதிய ஈடுபாடு

சிங்கப்பூரில் உள்ள மூத்தோர் சிலர், செயற்கை நுண்ணறிவால் (ஏஐ) உருவாக்கப்பட்ட குறுநாடகங்களைப் பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அவற்றை முழுமையாகப் பார்த்து ரசிப்பதற்காகத் தங்கள் தூக்கத்தையும்கூட அவர்கள் தியாகம் செய்கின்றனர்.

இலவசமாகப் பார்க்கும் வசதி, விறுவிறுப்பான கதைக்களம், எதிர்பார்ப்பைத் தூண்டும் முடிவுகள் ஆகியவற்றால், சிறிய அளவிலான அக்காணொளிகள் பொழுதைப் போக்க எளிதான வழியாக அமைகின்றன.

எனினும், அளவுக்கு அதிகமாக அவற்றைப் பார்ப்பது தனிமை, சமூகத்திலிருந்து விலகி இருப்பது போன்ற ஆழமான சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

சாலைகளில் நடக்கும்போதும் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும்போதும் மூத்தோர் தங்கள் கைப்பேசிகளில் மூழ்கியிருப்பதை அடிக்கடி காண முடிவதாகச் சின் மின் நாளிதழ் சனிக்கிழமை (நவம்பர் 28) தெரிவித்தது.

வசதியும் அடிமைப்படுத்தும் தன்மையும்

தமக்கு ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் செயற்கை நுண்ணறிவுக் குறுநாடகங்களைப் பார்க்கக் கைப்பேசியை எடுப்பதாக 59 வயது இல்லத்தரசி சென் லிமிங் கூறினார்.

முன்பு தாம் அதிக நேரம் நாடகங்களைப் பார்த்துத் தூக்கத்தைத் தொலைத்ததாகவும் இதனால் மறுநாள் சோர்வும் கண் அழற்சியும் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது நாளொன்றுக்கு மூன்று மணி நேரத்திற்குமேல் பார்ப்பதில்லை எனும் கட்டுப்பாட்டை அவர் கடைப்பிடிக்கிறார்.

65 வயது ஓய்வுபெற்றவரான ஹுவாங், இலவசமாகவும் உடனடியாகவும் பார்க்க முடிவதால் அக்காணொளிகள் வசதியாக இருப்பதாகத் தெரிவித்தார்.

உளவியல், சமூகப் பாதிப்புகள்

சில மூத்தோர் தனிமையைப் போக்கவே கைப்பேசிகளை நாடுவதாக லயன்ஸ் பிஃப்ரெண்டர்ஸ் அமைப்பின் நிர்வாக இயக்குநர் கேரன் வீ குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் சூ சி அறநிறுவனத்தின் சமூகப் பராமரிப்புத் தலைவர் லீ வெங் ஃபூ, இணையம் வழியாகச் சுகாதாரத் தகவல்களைப் பெறுவது குறித்துச் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆய்வு நடத்துவதாகத் தெரிவித்தார்.

மூத்தோர் நடைப்பயிற்சி, நண்பர்கள் சந்திப்பு, போதுமான தூக்கம் ஆகியவற்றைத் தியாகம் செய்தால் அது சிக்கலாக மாறும் என ஜீரோசைக் கன்சல்டன்ட்ஸ் நிர்வாக இயக்குநர் டாக்டர் வெய்ன் ஃப்ரீமேன் சோங் எச்சரித்தார்.

மேலும், மூத்தோரின் திரை நேரத்தை அரசாங்கம் தொடர்ந்து கண்காணிக்கும் எனத் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மூத்த துணை அமைச்சரும் சுகாதார மூத்த துணை அமைச்சருமான டான் கியட் ஹாவ் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.