சாத்துாரில் பட்டாசு ஆலை வெடிவிபத்து: ஒருவர் பலி
சாத்துார்: விருதுநகர் மாவட்டம் சாத்துார் அருகே ஒத்தையால் கிராமத்தில் பட்டாசு ஆலையில் நேற்று காலை நடந்த வெடி விபத்தில் தொழிலாளி மீனம்பட்டி மாடசாமி 33, சம்பவ இடத்தில் பலியானார்.
சிவகாசி பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயசக்தி 52. இவருக்கு சொந்தமான சின்னத்தம்பி பைரோடெக்ஸ் பட்டாசு ஆலை ஒத்தையாலில் உள்ளது. டி. ஆர். ஓ . லைசென்ஸ் பெற்ற இங்கு 15 க்கும் மேற்பட்ட அறைகளில் லட்சுமி, சோல்சா வெடிகள் தயாரிக்கப்படுகிறது.
மீனம்பட்டியைச் சேர்ந்த 6 தொழிலாளர்கள் நேற்று காலை 7:30 மணிக்கு கெமிக்கல் அறையில் மருந்து கலவை தயார் செய்து கொண்டிருந்தனர். அப்போது டீ குடிப்பதற்காக 5 பேர் அறையை விட்டு வெளியே சென்ற நிலையில் மாடசாமி 33, மட்டும் தொடர்ந்து பணி செய்தார். உராய்வு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் இருஅறைகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. இடிபாடுகளில் சிக்கி மாடசாமி பலியானார். இவருக்கு மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர்.
தீ பரவியதில் மேலும் இரு அறைகள் கருகின. சாத்துார், வெம்பக்கோட்டை பகுதியை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். மண் அள்ளும் இயந்திரம் வர தாமதமானதால் மீட்பு பணியும் தாமதமானது. போலீசார் முயற்சியில் இயந்திரம் கொண்டு வரப்பட்டு 3 மணி நேரம் தாமதத்திற்கு பிறகு உடல் மீட்கப்பட்டது.
சம்பவ இடத்தில் டி.எஸ்.பி., குருசாமி, இன்ஸ்பெக்டர் ராமராஜ், வருவாய்த் துறையினர் , வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையினர் விசாரித்தனர்.
சாலை மறியல் உடனடி நிவாரணம், ஆலை உரிமையாளர்களை கைது செய்யக்கோரி இறந்த மாடசாமி உறவினர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனை ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இவர்களிடம் டி.எஸ்.பி., யோகேஷ் குமார் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆலை நிர்வாகம் சார்பில் ரூ.5 லட்சம் காசோலை, ஈமச்சடங்கு செலவுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டதால் உடலை பெற்றுச் சென்றனர்.
அமைச்சரின் அக்கா மீது வழக்கு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசுவின் சகோதரியும், ஆலை உரிமையாளருமானஜெயசக்தி, அவரது மகள் செல்வமாரி, முரளீஸ்வரன், சூர்யபிரகாஷ்ஆகியோர் மீது சாத்துார் தாலுகா போலீசார் வழக்கு பதிந்தனர். இதில் சூர்யபிரகாஷ் கைது செய்யப்பட்டார். தலைமறைவான மற்ற மூவரை தேடி வருகின்றனர்.