சென்னை: கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கடந்த 10ம் தேதி கரூர் சென்ற முதல்வர் விஜய், பலியானோர் குட
சென்னை: கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கடந்த 10ம் தேதி கரூர் சென்ற முதல்வர் விஜய், பலியானோர் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை வழங்கினார். இதை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் தீரன் திருமுருகன், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சீனி அகமது உட்பட மூன்று பேர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை பரிசீலனை செய்த உயர்நீதிமன்றம், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தற்காலிக பணியே வழங்க வேண்டும். இருப்பினும் இந்த பணியானது வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்று கடந்த 10ம் தேதி உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கை கடந்த திங்கட்கிழமை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு, கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கி பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில் மேற்கண்ட விவகாரத்தில் மனுதாரர் தீரன் திருமுருகன் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றை நேற்று தாக்கல் செய்துள்ளார்.
அதில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கிய விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்படும் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும் போது எங்களது தரப்பின் வாதங்களை கேட்காமல் எந்தவித உத்தரவும் பிறப்பிக்க கூடாது என்று தெரிவித்துள்ளார். அரசு பணி ஆணை ரத்து செய்த விவகாரத்தில் முன்னதாக தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.