‘சிங்கப்பெண் கடன்’ திட்டத்தில் சுயதொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் அமைச்சர் காந்திராஜ் அறிக்கை
‘சிங்கப்பெண் கடன்’ திட்டத்தில் சுயதொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் அமைச்சர் காந்திராஜ் அறிக்கை
சென்னை: பெண்கள் பொருளாதாரத்தில் உயர கூட்டுறவு துறையில் ‘சிங்கப்பெண் கடன்’ திட்டத்தில் சுயதொழில் தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அமைச்சர் காந்திராஜ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பெண்களின் பொருளாதார தற்சார்பை உறுதி செய்யவும், தொழில் முனைவோராக உயர்த்தவும் கூட்டுறவு துறை சார்பில் ‘சிங்கப்பெண் கடன்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் மூலம் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள், கைம்பெண்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், தொழில் முனைவோர்கள், பணிபுரியும் மகளிர்கள் ஆகியோர் கடனுதவி பெற்று பயனடையலாம். அதன்படி, நடப்பாண்டில் நவம்பர் வரை 41,369 பயனாளிகளுக்கு ரூ.3,428.49 கோடி அளவில் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. கந்துவட்டி பிடியில் இருந்து மக்களை மீட்டு, பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகின்றன.
புதிய சுயதொழில் தொடங்க விரும்புவோரும், ஏற்கனவே செய்து வரும் தொழிலை விரிவுபடுத்த விரும்பும் மகளிர்கள் தங்களுக்கு அருகில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை நேரில் அணுகி கடனுதவி பெறலாம். மேலும், இத்திட்டம் தொடர்பான விவரங்கள் மற்றும் தேவையான உதவிகளை பெற 98840 00845 என்ற வாட்ஸ்அப் உதவி எண்ணை தொடர்புகொள்ளலாம்.