சிங்கப்பூர் 2027: போக்கிமான் உலகச் சாம்பியன்ஷிப் போட்டி
உலகின் ஆகப் புகழ்பெற்ற பொக்கிமோன் உலக சாம்பியன்ஷிப் போட்டி 2027ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் அதிகாரபூர்வமாக நடைபெறவுள்ளது.
அப்போட்டித் தொடர் அவ்வாண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை சிங்கப்பூர் எக்ஸ்போ வளாகத்தில் நடைபெறும்.
அதன் இறுதிப் போட்டியைச் சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
போக்கிமான் நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாகியுமான சுனேகாசு இஷிஹாரா, சான் பிரான்சிஸ்கோவில் ஆகஸ்ட் 30ஆம் தேதி நடைபெற்ற 2026ஆம் ஆண்டின் சாம்பியன்ஷிப் நிறைவு விழாவில் இந்தப் புதிய போட்டித் தளம் குறித்து அறிவித்தார்.
கலிஃபோர்னியாவில் நடைபெற்ற அப்பிரம்மாண்ட மூன்று நாள் நிகழ்வில் 50,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் பங்கேற்றனர்.
ஆண்டுதோறும் நடைபெறும் அந்நிகழ்ச்சியில் உலகெங்கிலுமுள்ள சிறந்த பொக்கிமோன் விளையாட்டாளர்கள் ஒன்றிணைந்து, தங்களுக்குப் பிடித்தமான அத்தொடரைக் கொண்டாடுவர்.
மேலும், புகழ்பெற்ற உலகச் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற பல்வேறு விளையாட்டுகளிலும் அவர்கள் ஈடுபடுவர்.
இந்த உலகச் சாம்பியன்ஷிப்பில் ‘பொக்கிமோன் டிரேடிங் கார்ட்’, ‘பொக்கிமோன் வீடியோ கேம் சாம்பியன்ஷிப்’, ‘பொக்கிமோன் கோ’ ஆகிய போட்டிகள் இடம்பெறும்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
2023ஆம் ஆண்டு ஜப்பானின் யோகோஹாமாவில் நடைபெற்றதற்குப் பிறகு, ஆசியாவிற்கு அப்போட்டித் தொடர் திரும்புவது இதுவே முதன்முறையாகும்.
மேலும், அமெரிக்காவிற்கு வெளியே பொக்கிமோன் உலகச் சாம்பியன்ஷிப் நடத்தப்படுவது இது நான்காவது முறை. சிங்கப்பூர் நிகழ்விற்கான நுழைவுச்சீட்டு விவரங்கள் இன்னும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள போதிலும், ரசிகர்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.