📅 Monday, 31 August 2026 IST | ஆவணி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil August 31, 2026 05:04 PM

நிதித் தொழில்நுட்ப நிறுவனங்கள் புதிய வாய்ப்புகளைக் கைப்பற்ற $220 மில்லியன் நிதி

நிதித் தொழில்நுட்ப நிறுவனங்கள் புதிய வாய்ப்புகளைக் கைப்பற்ற $220 மில்லியன் நிதி

நிதி சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்கள், எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகளைக் கைப்பற்றுவதற்காக சிங்கப்பூர் நாணய ஆணையம், $220 மில்லியன் நிதியாதரவை அறிவித்துள்ளது.

நிதி நிறுவனங்கள் தங்களுடைய புத்தாக்கமான செயல்களை விரைவுபடுத்தவும் அதற்கான திறன்களைப் பெருக்கிக் கொள்ளவும் அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த நிதி வழங்கப்படும்.

சிங்கப்பூர் நாணய ஆணையம் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 31) இதற்கு உறுதியளித்தது.

நிதித் துறையில் போட்டித்திறனுடன் விளங்கவும் தாக்குப்பிடித்து நிற்கவும் புதுப்பிக்கப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட நிதித்துறை தொழில்நுட்பம், புத்தாக்கத் திட்டம், இதுவரை 350க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு ஆதரவளித்துள்ளது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு அதன் நான்காவது பதிப்பாகும்.

செய்தியாளர்களிடம் பேசிய துணைப் பிரதமரும் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் தலைவருமான கான் கிம் யோங், “செயற்கை நுண்ணறிவு (ஏஐ), பிற முன்னணித் தொழில்நுட்பங்கள் புதிதாக உருவெடுத்து வரும் வேளையில் புதிய வளர்ச்சி வாய்ப்புகளை நாம் கைப்பற்ற விரும்புகிறோம்,” என்றார்.

சிங்கப்பூரில் பல ஆண்டுகளாக ஒரு வலுவான நிதி தொழில்நுட்பச் சூழலை உருவாக்க இத்திட்டம் உதவியுள்ளதாகவும் அவர் சொன்னார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

இத்துறையில் தற்போது 1,800க்கும் மேற்பட்ட நிதிதொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவற்றில் 10,000க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.

வர்த்தக, தொழில்துறை அமைச்சருமான திரு கான், இத்துறை தொடர்ந்து வளர்ச்சியடைவதாக நம்பிக்கை தெரிவித்தார்.

“இந்த வேகமான வளர்ச்சி தொடரும். கடந்த 2025ஆம் ஆண்டில் நிதி தொழில்நுட்பத் துறையில் மட்டும் ஏறக்குறைய $3 பில்லியன் முதலீடு செய்யப்பட்டுள்ளதை நாம் காண முடிகிறது. நிதித் துறை தொழில்நுட்பம், புத்தாக்கத் திட்டம் 4.0 தொடர்ந்து அதற்கான ஊக்குவிப்பை வழங்கும் என நம்புகிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.

இந்த $220 மில்லியன் நிதியுதவி ஆதரவளிக்கும் நான்கு முக்கிய அம்சங்களை அவர் விவரித்தார்.

சிங்கப்பூர், தொழில்நுட்பத்தில் தலைமை வகிக்கவும் ஆய்வு, உற்பத்தி மேம்பாட்டுக்குத் தேவையான அர்ப்பணிமிக்க குழுக்களை உருவாக்கவும் புத்தாக்கத்திறன்களின் அடித்தளத்தை உறுதிப்படுத்தவும் இந்த நிதி உதவும்.

அது மட்டுமல்லாமல், நிதிதொழில்நுட்ப நிறுவனங்கள் மூலதனத்தை ஈர்க்கவும் பிற சந்தைகளுக்கு சேவைகளை விரிவுபடுத்தவும் திட்டம் ஆதரவு அளிக்கும்.

பரிசோதனை கட்டத்திலிருந்து நம்பிக்கையளிக்கும் தீர்வுகள் மூலம் வர்த்தரீதியில் நிறுவனங்கள் செயல்படவும் நிதி கைகொடுக்கும்.

நிதித்துறை மேம்பாட்டுச் செலவுகளைக் குறைக்கவும், தொழில்நுட்பத்தைப் புகுத்தவும் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் அதற்கான பொதுவான தொழில்நுட்ப உள்கட்டமைப்பு, தளங்களுக்கு இத்திட்டம் ஆதரவளிக்கும்.

சிங்கப்பூரின் திறமையான ஊழியர் எண்ணிக்கை வலுப்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது என்று துணைப் பிரதமர் கான் குறிப்பிட்டார்.

“ஒட்டுமொத்தமாக நமது நிதிதொழில்நுட்ப நிறுவனங்கள், ஊழியர்கள் புத்தாக்கத்துடன் செயல்பட்டு பிற சந்தைகளில் ஊடுருவி வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதற்கான திறன்களை உருவாக்கத் திட்டம் உதவும்,” என்று அவர் கூறினார்.

இத்திட்டத்தைச் சீரமைக்க தொடர்ந்து துறைசார்ந்த நிபுணர்களுடன் இணைந்து செயல்படுவோம் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் கூறியுள்ளது.