சிங்கப்பூர் பூங்காக்களில் துப்புரவுப் பணி செய்யத் தானியங்கி ரோபோக்கள்
பொது இடங்களைச் சுத்தப்படுத்தும் பணிகளை மேம்படுத்தவும் மனிதவளத்தை நாடியிருப்பதைக் குறைக்கவும் தானியங்கி முறையில் பாதைகளைக் கூட்டும் இயந்திரங்களின் பயன்பாட்டைத் தேசிய சுற்றுப்புற வாரியம் விரிவுபடுத்துகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் எஸ்பிளனேட் பூங்கா, ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் இத்தகைய இயந்திரங்கள் முன்னோடித் திட்டமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
வழக்கமான பெருக்கிக் கூட்டும் துப்புரவுப் பணிகளில் சுமார் 30 விழுக்காடு உற்பத்தித் திறனை உயர்த்தித் தரும் இந்த இயந்திரங்கள், முதன்முதலாக 2025 ஜூலையில் பீஷான்-ஆங் மோ கியோ பூங்காவில் அறிமுகப்படுத்தப்பட்டன.
தொடர்ந்து, பொருத்தமான மேலும் பல பூங்காக்கள், இணைப்புப் பாதைகளுக்கும் இத்தொழில்நுட்பத்தை விரிவாக்க வாரியம் திட்டமிட்டுள்ளது.
அதேவேளையில், பொது இடங்களின் தூய்மை குறித்த சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் அண்மைக்கால ஆய்வில், பொது இடங்களின் தூய்மை மீதான மக்களின் திருப்தி விகிதம் 2023ல் 94 விழுக்காடாக இருந்தது எனவும், 2025ல் அது 91 விழுக்காடாகச் சற்று குறைந்துள்ளது என்றும் தெரியவந்துள்ளது.
குறிப்பாகக் காப்பி கடை கழிவறைகளின் தூய்மை குறித்த மனநிறைவு 48.3 விழுக்காடாகச் சரிந்துள்ளது.
இதனையடுத்து, கழிவறைகளைச் சுகாதாரமாகப் பராமரிக்காத காப்பி கடை உரிமையாளர்களுக்கு எதிராக 2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் சுமார் 150 அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும், உயரமான மாடிகளில் இருந்து குப்பை வீசுபவர்களைக் கண்டறிய அதிநவீனக் கண்காணிப்புக் கேமரா மென்பொருள்களையும் வாரியம் பயன்படுத்தி வருகிறது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
மறுபுறம், உணவகங்களில் உணவுத் தட்டுகளைத் திரும்ப ஒப்படைக்கும் பழக்கம் மக்களிடையே அதிகரித்துள்ளது.
இந்த நற்பழக்கம் அதிகரித்ததால் எச்சரிக்கைக் கடிதங்களின் எண்ணிக்கை 2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் 52ஆகப் பெருமளவில் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.