சிங்கப்பூர்ச் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த கலாம் பிரியாணி
பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 95-ஆவது பிறந்தநாள் விழா, சிங்கப்பூர் சாதனைப் புத்தக நிகழ்வு மற்றும் கலாம் உணவகத்தின் வெற்றிச் சந்திப்பு ஆகிய முப்பெரும் விழாக்கள் நடைபெற்றதன.நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக ஜாலான் பெசார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வான் ரிசால் கலந்து கொண்டார். நிகழ்வின் தொடக்கமாக, டாக்டர் கலாமின் உருவப்படத்திற்குத் தலைவர்கள் மலர் மாலை அணிவித்துத் தங்களது மரியாதையைச் செலுத்தினர். பல்வேறு சமூக அமைப்புகளின் தலைவர்களும், முக்கியப் பிரமுகர்களும் ரோஜா மலர்களைத் தூவி கலாமின் 95-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.நிகழ்ச்சியின் அடுத்த கட்டமாக, பாலர்பள்ளி மாணவர்கள் ஆடி, வந்திருந்த அனைவரையும் பரவசப்படுத்தினர். டாக்டர் கலாமிற்கு மாணவர்கள் மீது இருந்த பேரன்பைப் போற்றும் வகையில், கலாம் உணவக நிர்வாகிகள் ஜான் ராமமூர்த்தி, ராஜு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வான் ரிசால் ஆகியோர் தேவையுள்ள மாணவர்களுக்கு $50 மதிப்புள்ள புத்தகப் பற்றுசீட்டுகளும் மற்றும் சிறப்புப் பரிசுப் பைகளும் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியின் மணிமகுடமாக, நறுமணமிக்கச் சீரகச் சம்பா அரிசியில் தயாரிக்கப்பட்ட பிரத்யேக 'கலாம் பிரியாணி' அறிமுகம் செய்யப்பட்டது. 1.9 மீட்டர் நீளமும், 0.45 மீட்டர் அகலமும் கொண்ட பிரம்மாண்ட தட்டில் தயாரிக்கப்பட்ட இந்த மட்டன் பிரியாணி, 'சிங்கப்பூரின் மிகப்பெரிய மட்டன் பிரியாணி தட்டு' என்ற பிரிவில் அதிகாரப்பூர்வமாகச் 'சிங்கப்பூர்ச் சாதனைப் புத்தகத்தில்' இடம் பிடித்துப் புதிய சாதனைப் படைத்தது. இந்தச் சாதனை பிரியாணியை நேர்த்தியாகச் செய்து முடித்த சமையற்கலைஞர்களுக்கு மேடையில் சான்றிதழ்களும் விருதுகளும் வழங்கிப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. நற்பணிப் பேரவை தலைவர் ரவீந்திரன் உரையாற்றினார். ஒருங்கிணைப்பாளர் மில்லத் அகமது முன்னெடுத்து நடத்திய 12-ஆவது சாதனை நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது. சமூக ஆர்வலர் ஜான் ராமமூர்த்தி விழா நிறைவுரையில் பெமிலா ராமமூர்த்தி, ராஜ் நாராயணன், லதா ரவி ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். எழுத்தாளர் பிரேமா மகாலிங்கம் நிகழ்ச்சியை வழிநடத்தினார்.- நமது செய்தியாளர் வெ. புருஷோத்தமன்