📅 Monday, 19 October 2026 IST | ஐப்பசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 19, 2026 04:04 AM

எஸ்ஐஏ விமான அதிர்வுச் சம்பவம் 2025 குறித்த அறிக்கை

எஸ்ஐஏ விமான அதிர்வுச் சம்பவம் 2025 குறித்த அறிக்கை

பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து சிங்கப்பூர் நோக்கி வந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானம் மோசமான வானிலையால் அதிர்வுக்குள்ளானதில் விமானப் பணிப்பெண் ஒருவரின் வலது கணுக்காலில் முறிவு ஏற்பட்டதுடன் மேலும் நால்வர் லேசாகக் காயமடைந்தனர்.

கடந்த 2025 நவம்பர் 14ஆம் தேதி நிகழ்ந்த அச்சம்பவம் குறித்த விசாரணை அறிக்கையை, போக்குவரத்து அமைச்சின்கீழ் இயங்கும் போக்குவரத்து பாதுகாப்பு விசாரணைப் பிரிவு அக்டோபர் 5ஆம் தேதி வெளியிட்டது. ‘SQ919’ என்ற ஏர்பஸ் A350-900 ரக விமானம், 40,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, கிட்டத்தட்ட 80 நாட்டிக்கல் மைல் தொலைவில் புயல் மேகங்கள் இருப்பதை ரேடார் மூலம் விமானிகள் அறிந்தனர்.

புயல் மேகங்கள் 30,000 அடி உயரத்தில் இருந்ததால், பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்பான தூரத்தைக் காட்டிலும் 10,000 அடி மேலே பறப்பதாகக் கருதி விமானிகள் அதே பாதையில் பயணத்தைத் தொடர்ந்தனர். எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பயணிகளிடம் இருக்கை வார்ப்பட்டையை அணியுமாறு கூறப்பட்டது.

பின்னர், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தின் உத்தரவின்பேரில் விமானம் 38,450 அடிக்குக் கீழே இறங்கியபோது திடீரென பலத்த அதிர்வுக்குள்ளானது. புயல் மேகங்களுக்கு மேலே பறந்தபோதிலும் அந்த அதிர்வு ஏற்பட்டுள்ளது. புவிஈர்ப்பு விசை மிகக்குறுகிய நொடிப் பொழுதில் மாறுபட்டதால் விபத்து நிகழ்ந்தது. விமானம் இரவு 8.41 மணிக்குச் சிங்கப்பூரில் பத்திரமாகத் தரையிறங்கியது.

இருக்கை வார்ப்பட்டையை அணியக்கோரும் விளக்கை ஒளிரச் செய்தது, விமானத்தை மெதுவாகக் கீழே இறக்கியது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விமானிகள் மேற்கொண்டபோதிலும், அவர்களால் அதிர்வைத் தவிர்க்க முடியவில்லை என்று அறிக்கை கூறியது. இடிமின்னல், பிற வானிலை மாற்றங்களின் தாக்கம் ரேடாரில் தெரியும் புயல் மேகங்களின் உயரத்தையும் தாண்டிப் பரவக்கூடும் என்பதையும், மேகங்களில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட 5,000 அடி பாதுகாப்பான செங்குத்துத் தொலைவில் பயணம் செய்தாலும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதையும் இச்சம்பவம் சுட்டிக்காட்டுவதாக அறிக்கை குறிப்பிட்டது.

அறிக்கையின் முடிவுகளை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்த எஸ்ஐஏ நிறுவனம், பாதிக்கப்பட்ட பணிப்பெண் தற்போது மீண்டும் பணிக்குத் திரும்பிவிட்டதாகக் கூறியது.

விமான அதிர்வுகளைக் கையாள்வதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் குறித்துத் தனது விமானிகளுக்கும் விமானப் பணியாளர்களுக்கும் வழக்கமாகப் பயிற்சிகளும் வழிகாட்டல்களும் வழங்கப்பட்டு வருவதாக அது குறிப்பிட்டது.

போக்குவரத்து பாதுகாப்பு விசாரணைப் பிரிவின் வான்வழிப் பாதுகாப்பு விசாரணை அறிக்கைகளின்படி, 2004 முதல் 2025 வரை சிங்கப்பூரில் பதிவான விமானங்களை உள்ளடக்கிய குறைந்தது 11 அதிர்வுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.