📅 Wednesday, 26 August 2026 IST | ஆவணி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Technology August 26, 2026 06:01 PM

சிங்கப்பூரில் நிதித் தொழில்நுட்ப நிறுவனங்களின் வேலைவாய்ப்பு

சிங்கப்பூரில் நிதித் தொழில்நுட்ப நிறுவனங்களின் வேலைவாய்ப்பு

சிங்கப்பூரில் சில நிதித் தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகப் புதிய ஊழியர்களை வேலைக்கு எடுப்பதை முடுக்கிவிடவிருக்கின்றன.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் (ஏஐ) அதிவேக வளர்ச்சி, வேலை இழப்புக் குறித்த அச்சத்தை அதிகரித்துள்ள நிலையில், அத்தகைய நிறுவனங்கள் வேலைக்கு ஆள் எடுப்பதைத் தீவிரப்படுத்துகின்றன. வணிக விரிவாக்கமும் ஊழியர் எண்ணிக்கையை உயர்த்த ஊக்கமளித்து வருகிறது. பொருத்தமானவர்களை, குறிப்பாக ஏஐ தொழில்நுட்பத் திறனாளர்களை வேலையில் சேர்ப்பதே முக்கியமானது என்று அந்நிறுவனங்கள் கூறுகின்றன.

எடுத்துக்காட்டாக, ஆஸ்திரேலியாவில் தொடங்கப்பட்ட ‘ஏர்வாலெக்ஸ்’ நிறுவனம், சிங்கப்பூரில் உள்ள அதன் ஊழியர்களின் எண்ணிக்கையை ஆண்டுக்கு ஆண்டு 70 விழுக்காட்டுக்கும் மேல் உயர்த்தி இவ்வாண்டு இறுதிக்குள் கிட்டத்தட்ட 800க்கு அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. தற்போது இந்நிறுவனத்தில் ஏறக்குறைய 700 முழுநேர ஊழியர்கள் இருக்கின்றனர்.

தயாரிப்பு, பொறியியல், வடிவமைப்பு ஆகிய துறைகளிலும் செயலாக்க நிர்வாகம், விற்பனை, நிதி போன்ற பிரிவுகளிலும் ஆள்களைச் சேர்க்க இந்நிறுவனம் எண்ணியுள்ளது.

சிங்கப்பூரில், ஏர்வாலெக்ஸ் சென்ற நிதியாண்டில் 107 விழுக்காட்டு வருவாய் உயர்வைப் பதிவுசெய்துள்ளது. இது தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அது ஈட்டிய மும்மடங்கு வளர்ச்சி. அதேபோல், உலகளாவிய கட்டண நிறுவனமான ‘ரெவல்யூட் சிங்கப்பூர்’, ஊழியர் எண்ணிக்கை 2024 முதல் 2025 வரை கிட்டத்தட்ட இரட்டிப்பானது.

தற்போது 168ஆக உள்ள ஊழியர் எண்ணிக்கையை, அடுத்த மூவாண்டுகளுக்குள் 300க்கும் மேல் உயர்த்தும் இலக்குடன் இந்த வேகத்தைத் தக்கவைக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தயாரிப்பு, வடிவமைப்பு, அத்துடன் இடர்பாடுகளைக் கையாளுதல், தணிக்கை முதலிய பிரிவுகளில் ரெவல்யூட்டில் வேலைவாய்ப்புகள் நிரப்பப்படாமல் இருக்கின்றன.

பல நாணயக் கட்டணத் தளமான ‘யூட்ரிப்’ நிறுவனமும் வேலைவாய்ப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. தயாரிப்பு, பொறியியல், நிதி, உள்ளிட்ட துறைகளில் அது ஆள்களை வேலைக்கு எடுக்கிறது. அந்நிறுவனத்தில் தற்போது சிங்கப்பூரில் 150 ஊழியர்கள் உள்ளனர். மேலும் ஆண்டின் இறுதிக்குள் தனது ஊழியர்களின் எண்ணிக்கையை குறைந்தபட்சம் 10 விழுக்காடாவது விரிவாக்க அது திட்டமிட்டுள்ளது.